வேம்பரளி முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
நத்தம்: நத்தம் அருகே வேம்பரளி முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
இதையொட்டி கோயில் முன் யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த மார்ச் 12ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் யாக பூஜை தொடங்கியது. நவகிரக ஹோமம், சுதர்சன ஹோமம் ,லட்சுமி ஹோமம், அஸ்திர ஹோமம், கோ பூஜை நடந்தது. 13ஆம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜைகள் கால பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று நான்காம் கால யாக பூஜை, யாக வேள்வி மகா பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக காசி, ராமேஸ்வரம், கங்கை, அழகர்கோவில், காவிரி போன்ற புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்கள் நிரம்பிய குடங்கள் ஊர்வலமாக மேள தாளம் முழங்க கோவிலைச் சுற்றி வந்தது. பின்னர் கோயிலின் உச்சியில் உள்ள கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கருடன் வானத்தில் வட்டமிட்டார், அதைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குலவை இட்டனர். கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து முத்தாரம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் மற்றும் பூஜை மலர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. பின் அறுசுவை உணவு அன்னதானம் நடந்தது. இதில் சுற்று வட்டாரத்திலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.