பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் காலை, 9:00 மணிக்கு, யாகசாலை பூஜையும், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடந்து வருகிறது. திருவிழாவின் முதல்நாள் இரவு, 8:00 மணிக்கு, மலர் பல்லக்கிலும், இரண்டாம் நாளில் சூரிய பிரபை, சந்திர பிரபையிலும், மூன்றாம் நாளில் சிம்ம வாகனத்திலும், நான்காம் நாளில் காமதேனு வாகனத்திலும், ஐந்தாம் நாளில் வெள்ளி ரிஷப வாகனத்திலும் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதனைத்தொடர்ந்து வெள்ளையானை சேவை நடந்தது. ஏழாம் நாளான நேற்று, திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தேரோட்டம் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின், காலை, 8:30 மணிக்கு, பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பட்டாடை மற்றும் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட சோமாஸ்கந்தர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர், அலங்கரிக்கப்பட்டிருந்த தனித்தனி தேரில் எழுந்தருளினர். மாலை, 4:40 மணிக்கு, பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தேரோட்டத்தை, பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தேரை வடம்பிடித்து இழுத்து, தோரோட்டத்தை துவங்கி வைத்தனர். ஐந்து தேர்களும், சிறுவாணி ரோடு, ரத வீதி வழியாக, கோவிலை சுற்றிய தேர்கள் மீண்டும் நிலையை அடைந்தன. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பேரூரா பட்டீசா என, கோஷங்கள் எழுப்பினர். வரும், 18ம் தேதி, நடராஜப்பெருமானுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, திருவீதி உலா வந்து, யாகசாலை பூஜை நிறைவு செய்யப்பட்டு, கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.