உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குண்டத்து காளியாதேவி கோவிலில் குண்டம் திருவிழா

குண்டத்து காளியாதேவி கோவிலில் குண்டம் திருவிழா

மேட்டுப்பாளையம்: ஊமப்பாளையம் குண்டத்து காளியாதேவி கோவிலில் நடந்த, குண்டம் விழாவில், ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினர்.

மேட்டுப்பாளையம் அடுத்த ஓடந்துறை ஊராட்சி, ஊமப்பாளையம் காளியாதேவிபுரத்தில், குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. இக்கோவில், 34 ம் ஆண்டு குண்டம் திருவிழா, இம்மாதம், 1ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து, அம்மன் சுவாமியை அழைத்து வந்தனர். அப்போது தேர் அலகு குத்திய பக்தர்கள் உடன் வந்தனர். காலை, 7:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. முதலில், மல்லிகை பூ பந்தை, குண்டத்தில் உருட்டி விட்டனர். அதன் பிறகு, தலைமை பூசாரி பழனிசாமி, அருள்வாக்கு பூசாரி காளியம்மாள், சக்தி கரகம் எடுத்து வந்த ரங்கராஜ், உட்பட, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினர். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்பு, அம்மனுக்கும், மகா முனீஸ்வரருக்கும், அக்னி அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், மஞ்சள் நீராட்டும், பொங்கல், மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. 18 ம் தேதி அம்மனுக்கு, 108 இளநீர் அபிஷேகமும், அலங்கார பூஜையும், 21 ம் தேதி மறுபூஜையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை பூசாரிகள் பழனிசாமி, காளியம்மாள் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !