முத்துமாரியம்மன் கோயிலில் தீமிதித்து லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி -பங்குனி திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் தீமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழா மார்ச் 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற காப்பு கட்டி விரதம் இருந்தனர். தினமும், பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி, பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். நேற்று கரகம், மது, முளைப்பாரி நிகழ்ச்சி நடந்தது.முக்கிய திருவிழாவான பால்குட திருவிழா இன்று நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கோயில் வாயிலில் தீமிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கைக்குழந்தையுடனும், காவடியுடனும், அக்னி சட்டி ஏந்தியும் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தக்கார் சிவலிங்கம், செயல் அலுவலர் சுமதி, கணக்கர் அழகுபாண்டி செய்தனர்.