புஷ்பவனேஸ்வரர் கோயிலில் திருகல்யாண விழா கோலாகலம்
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர்-சவுந்தர நாயகி அம்மன் கோயிலில் திருக்கல்யாண விழா கோலாகலமாக நடந்தது.
புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் பங்குனி திருவிழாவின் 8ம் நாள் விழாவான திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது. திருக்கல்யாண மண்டபத்தில் அம்மனும் சுவாமியும் அலங்கார கோலத்தில் எழுந்தருளினர். அம்மனுக்கும், சுவாமிக்கும் பட்டு வேஷ்டி, பட்டு சேலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மன் சார்பாக விக்னேஷ் பட்டரும், சுவாமி சார்பாக மகேஷ் பட்டரும் மாலை மாற்றி கொண்டனர். காலை 11.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சுமங்கலி பெண்கள் கோயில் வளாகத்தில் திருமாங்கல்ய கயிறு மாற்றி கொண்டனர். நேர்த்திகடன் விரதமிருந்தவர்கள் பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு, லட்டு, பூந்தி உள்ளிட்டவைகள் வழங்கினர். கொரானோ பரவல் காரணமாக இரு ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் இந்தாண்டு ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண உற்சவத்தை கண்டு களித்தனர். திருக்கல்யாண உற்சவம் உள்ளுர் சேனலில் நேரடியாகவும் ஒளிபரப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்ட பக்தர்கள் செய்திருந்தனர். இன்று(17ம் தேதி) காலை 9:25 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.