உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி உத்திரம் கோலாகலம்: முருகனுக்கு காவடி, பால்குடம் சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பங்குனி உத்திரம் கோலாகலம்: முருகனுக்கு காவடி, பால்குடம் சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் நடந்த பங்குனி உத்திர விழாவில் ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்தும், பூக்குழி இறங்கியும் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். இக்கோயிலில் பங்குனி உத்திர விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதை முன்னிட்டு சுவாமிக்கு தினமும் பல்வேறு அபிஷேகங்கள், பூஜைகள், ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் தினமும் இரவு நடந்தன.

உத்திர நாளான இன்று அதிகாலை முதல் நொச்சிவயல் ஊரணியில் இருந்து பக்தர்கள் தங்களது கண்ணம் மற்றும் முகத்தில் அலகு குத்தி, காவடி, பால்குடங்கள் சுமந்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். தனியார் அமைப்புகள் சார்பில் வழிநெடுக ஆங்காங்கே நீர், மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர்.

மண்டபம், வேதாளை, இடையர்வலசை, வளநாடு, உச்சிப்புளி, குயவன்குடி உட்பட 51 கோயில் பங்குனி உத்திர விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பங்குனி உத்திரத்தையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கிழக்கு வாசலில் உள்ள முருகன் சன்னதி, மேற்கு வாசலில் அமைந்துள்ள பால சுப்பிரமணிய சுவாமி சன்னதி களுக்கு, பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. ராமேஸ்வரம் புதுரோடு, கரையூர், இந்திரா நகர், பாம்பன், தங்கச்சிமடம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு வகையான காவடிகளை சுமந்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர். பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்து நேர்த்தி கடன் செலுத்திவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !