பழநியில் நேற்று திருக்கல்யாணம்: இன்று மாலை தேரோட்டம்
பழநி: பழநி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது
பழநி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா, முருகனின் மூன்றாம் படைவீடான வீடான திருஆவினன்குடி கோயிலில் மார்ச் 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி தந்தப் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. மேலும் மாலை நேரத்தில் வெள்ளி யானை, ஆட்டுக்கிடா, காமதேனு தங்கமயில் வாகனங்களில் சுவாமி எழுந்தருளினார். பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
திருக்கல்யாணம்: பங்குனி உத்திர திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று மாலை 5:45 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. திருமண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 8.00 மணிக்கு மேல் சுவாமி திருக்கல்யாண கோலத்தில் வெள்ளி ரதத்தில் கிரி வீதியில் தேரோட்டம் நடைபெற்றது. இன்று (மார்ச்.,18) அதிகாலையில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளி தீர்த்தம் வழங்குதல் நடைபெற்றது. அதன்பின் திருஆவினன்குடிக்கு தந்த பல்லாக்கில் சுவாமி எழுந்தருளுவார். மாலை 4:45 மணிக்கு மேல் பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடைபெறும். இரவு 9:00 மணிக்கு தங்கப்பல்லக்கில் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். மார்ச் 21, அன்று கொடி இறக்குதல் உடன் பங்குனி உத்திர உற்சவம் நிறைவு பெறு உள்ளது. பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் அடிவாரம் குடமுழுக்கு அரங்கில் தினந்தோறும் மாலை 4:00 மணிக்கு மேல் நடைபெற்று வருகிறது. திருக்கல்யாண உற்சவத்தில் இணை ஆணையர் நடராஜன், கண்காணிப்பாளர்கள் முருகேசன், வடிவுக்கரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.