உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ணாரியம்மன் குண்டம் விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தீமிதித்தனர்

பண்ணாரியம்மன் குண்டம் விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தீமிதித்தனர்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியில் பிரசித்தி பெற்ற  பண்ணாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா  2ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கியும்,சாமி தரிசனம் செய்தனர்.

 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழகம்,கர்நாடகத்தில் இருந்த வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி,அம்மனை வழிபட்டனர். பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா மார்ச் 8ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி, கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக குண்டம் விழா  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பக்தர்கள் காணிக்கையாக அளித்த வேம்பு,ஊஞ்சல் மரத்துண்டுகளை கொண்டு  தீக்குண்டம் வளர்க்கப்பட்டது. விழாவையொட்டி பண்ணாரி அம்மனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டு வீணை அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. செவ்வாய்க்கிழமை அதிகாலை2.45 மணிக்கு  படைக்கலத்துடன் திருக்குளம் சென்று அங்குள்ள சருகுமாரியம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு,தாரை தப்பட்டை முழங்க,மேளதாளங்களுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் உற்சவர் குண்டத்துக்கு அழைத்து வரப்பட்டது. குண்டத்தில் கற்பூரம் ஏற்றி  பூஜை செய்தும் மலர்களை குண்டத்தில் தூவியும் அதிகாலை3.55 மணிக்கு முதலில் பூசாரி செந்தில்குமார்  குண்டத்தில் இறங்கி தீ மிதித்தார். அதனைத் தொடர்ந்து இசைக்கலைஞர்கள், ஊரக வளர்ச்சி முதன்மை செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி அமுதா,பலானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி, உள்ளிடோர் அரசு அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள், மாணவிகள்,திருநங்கைகள், கைக்குழந்தையுடன் பெண்கள்,காவலர்கள்,வனத்துறையினர் என லட்சக்கணக்கானோர் தீ மிதித்தனர்.

அதனைத் தொடர்ந்து,குண்டம் இறங்கிய  லட்சக்கணக்கான பக்தர்கள்  கோவிலுக்குள் நேரடியாக  சென்று அம்மனை தரிசித்து சென்றனர். பக்தர்கள் வசதிக்காக வெயில் தாக்காத அலுமிய கொட்டகை அமைத்திருந்தனர்.வழக்கமாக கோவில் பூச்சாட்டும் போதும்,குண்டம் இறங்கும் நாளன்றும் மழை பெய்வது ஐதீகம்.நேற்று முன்தினம் திங்களன்று இரவு 11.30மணிமுதல் 12.00மணிவரை கோவில் சுற்றுவட்டாரத்தில் லேசான மழைபெய்தது. பாதுகாப்பு பணியில் ஈரோடு மாவட்ட எஸ்.பி.,சசிமோகன் தலைமையில் ஈரோடு, கோவை, நாமக்கல், ஊட்டி, உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து போலீசார்,போக்குவரத்து போலீசார், ஊர்காவல்படையினர்,என2060 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.குண்டம் இறங்கும் போது பலர் குண்டத்தை ஒட்டிய பகுதியில் தடுமாறி விழுந்தனர்.குண்டத்தை சுற்றியும் தீயணைப்பு படைவீரர்கள்,ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தயார்நிலையில் இருந்தனர்.திருவிழா என்பதால் கர்நாடக மாநில பஸ்கள் இயக்கப்படவில்லை.திருவிழாவில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் கண்ணன்,கோவில் இணைஆணையர் சபர்மதி,மற்றும் பரம்பரை அறங்காவலர்கள், வருவாய்த்துறையினர், மருத்துவதுறையினர், தன்னார்வலர்கள் ,கலந்து கொண்டனர். ஈரோடு, கோவை, கரூர், நாமக்கல், சத்தியமங்கலம்,புளியம்பட்டி, தாளவாடி, கோபி, கவுந்தப்பாடி, நீலகிரி, அன்னுார், மேட்டுப்பாளையம், மற்றும் தமிழகத்தின் வெளி மாவட்டங்களிலிருந்தும்,கர்நாடக மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். போக்குவரத்துகழகத்தின் சார்பில் 250க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !