ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் இன்று ஐந்து கருட சேவை!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழாவையொட்டி, இன்று இரவு ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடக்கிறது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா, கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 5ம் நாளான இன்று காலை 9 மணிக்கு மங்களாசாசனம் நடக்கிறது. இதற்காக ஆடிப்பூர மண்டபத்தில் எழுந்தருளும் பெரியாழ்வார், பெரிய பெருமாள், சுந்தரராஜன், திருவேங்கட முடையான், திருத்தங்கல் அப்பன், ஆண்டாள், ரெங்கமன்னார் ஆகியோருக்கு மங்களாசாசனம் செய்து வைக்கிறார். இதை தொடர்ந்து, இரவு 10 மணிக்கு நடக்கும் ஐந்து கருட சேவை நிகழ்ச்சியில், ஆண்டாள் பெரிய அன்ன வாகனம், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜன், திருவேங்கடமுடையான், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனம், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருள, நான்கு ரதவீதிகளில் வலம் வருதல் நடக்கிறது. இதை காண, பல மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் குருநாதன், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.