திண்டுக்கல்லில் 16 ம் நூற்றாண்டு குதிரை வீரன் நடுகல் கண்டெடுப்பு
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே 16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரை வீரன் நடுகல், பெண்ணுக்கு கிணறு கொடுத்த கல்வெட்டு, தண்ணீர் தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. குஜிலியம்பாறை அருகே ராமகிரி பிரிவு - அம்மாபட்டி ரோட்டில் உள்ள குளக்கரையில் குதிரை வீரன் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வாளர் விஸ்வநாததாஸ், தளிர் சந்திரசேகர், மாணவர் முரளிதர், ஆசிரியர்கள் சிவசங்கர், ஜெகதீசன் கூறியதாவது:பாய்ந்த நிலையிலுள்ள குதிரையில் வீரன் ஒருவன் கம்பீரமாக அமர்ந்து வாளை தலைக்கு மீது தூக்கிய நிலையிலும், இடது கை குதிரையின் கடிவாளத்தை பிடித்த நிலையிலும் உள்ளது. வீரனின் இடைவாரிலிருந்து வேல் ஒன்று முன்னோக்கி வீரனின் இடது தோளையொட்டி குதிரையின் தலைக்கு மேல் நீட்டியபடி உள்ளது.
சண்டை நடந்த தகவல்: வீரன் தலையில் கரண்ட மகுடம் சூடி, காதில் வளையம் தொங்கியபடி, இடையில் குறுவாள் சொருகியபடி இருக்கிறான். தோளுக்கு மேல் வட்டமாக சூரியன் உள்ளது.மதுரை நாயக்கர் முதல் அரசர் விஸ்வநாத நாயக்கர் ஆட்சியில் பாளையப்பட்டு பிரிக்கப்பட்டு கடவூர் பாளையம் உருவாக்கப்பட்டது. 1625 ல் கடவூர் பாளையத்தில் இருந்து ராமகிரியை தலைமையிடமாக கொண்டு ஒரு பாளையம் பிரிக்கப்பட்டது. இந்த ராமகிரி பாளையத்தின் எல்லை பூசலில் போர் நடந்தது.அக்கால கட்டத்தில் இந்த நடுகல் நடப்பட்டுள்ளது.வாளை தூக்கிய நிலை வீரமரண கதை, குதிரை பாய்ந்த நிலை போர் களத்தையும், சூரியன் இருப்பது உச்சிப்பொழுதையும் உக்கிரமமான சண்டை நடந்ததையும் குறிக்கும். தற்சமயம் இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக இந்த நடுகல்லை வணங்குகின்றனர்.
பெண்ணுக்கு கிணறு நன்கொடை: இந்த குதிரை வீரன் நடுகல்லில் இருந்து 660 அடி தூரத்தில் பெண் ஒருவருக்கு கொடையாக கிணறு கொடுக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டு 1814 ம் ஆண்டை சேர்ந்தது. கல்வெட்டில் பவ ஆண்டு சித்திரை 2 சந்திரன், சூரியன் சாட்சியாக பொட்டு சின்னம்மா என்ற பெண்ணுக்கு பவ ஆண்டு சித்திரை இரண்டாம் தேதி கிணறு வெட்டி கொடுத்தது.பசு நீர் குடிக்கும் தொட்டி பொம்மி நாயக்கர் என்பவர் கொடையாக கொடுத்தார் என்ற விவரம் பொறிக்கப்பட்டுள்ளது என்றனர்.