தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
தஞ்சை: தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா இன்று (30ம் தேதி) காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சாவூர் பெரியகோவிலில் சந்திரசேகரர் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலுக்குள்ள புறப்பாடாகி இன்று(30ம் தேதி) காலை கொடியேற்றப்பட்டது. நாளை 31ம் தேதி காலை பல்லக்கு புறப்பாடும், மாலை சிம்ம வாகனத்தில் சுவாமிகள் புறப்பாடும் நடக்கிறது. 1ம் தேதி மாலை மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் புறப்பாடு, 2ம் தேதி காலை விநாயகருக்கு சந்தனக்காப்பும், மாலை மேஷ வாகனத்தில் சுப்பிரமணியர் சுவாமிகள் புறப்பாடு நடக்கிறது. 3ம் தேதி காலை சுப்பிரமணியர் பல்லக்கு புறப்பாடும், மாலை வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடும், 4ம் தேதி சுப்பிரமணியருக்கு சந்தனகாப்பு அலங்காரம், மாலை சைவ சமயாச்சாரியர் நால்வர் புறப்பாடு நடக்கிறது. 5ம் தேதி காலை நால்வர் பல்லக்கில் புறப்பாடு, சுவாமி சந்திரசேகரர் பட்டமும், மாலை சூரிய பிரபையில் சந்திரசேகர சுவாமி புறப்பாடும், 6ம் தேதி மாலை சந்திர பிரபையில் சுவாமிகள் புறப்பாடும், 7ம் தேதி மாலை கோவில் வசந்த மண்டபத்தில் சுவாமிகள் பிரவேசம், செங்கோல் வைபவம், 8ம் தேதி மாலை சுவாமிகள் முத்துப்பல்லக்கில் புறப்பாடு, 9ம் தேதி மாலை பூதவாகனத்தில் சுவாமிகள் புறப்பாடு, 10ம் தேதி வெள்ளியானை வாகனத்தில் சுவாமிகள் புறப்பாடு, 11ம் தேதி காலை சந்திரசேகர் வெண்ணெய்தாழி அலங்காரமும், மாலை வெள்ளி யானை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.
அன்றைய தினம் ஓலைச்சப்பரத்தில் சந்திரசேகரர் சுவாமி, அம்பாள் புறப்பாடும் நடக்கிறது.12ம் தேதி மாலை சுவாமிகள் கைலாச பர்வத வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. 13ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், அன்று காலை 5.45 மணிக்கு மேல் தியாகராஜசுவாமி, ஸ்கந்தர், கமலாம்பாள், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் சுவாமிகள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுடன் முத்துமணி அலங்காரத்தில் தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து 16ம் தேதி கொடியேற்றத்துடன் விழா முடிவு பெறுகிறது