உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆகாச ராயர் கோவிலில் ஆகம விதிமீறல்?

ஆகாச ராயர் கோவிலில் ஆகம விதிமீறல்?


அவிநாசி: ஆகாச ராயர் கோவிலில் ஆகம விதிமீறி சிலைகள் நிறுவ முயற்சி மேற்கொள்வதாக, பக்தர்கள் புகார் கூறியுள்ளனர்.

கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும், சுந்தரமூர்த்தி நாயனரால் பாடல் பெற்றதும், தமிழகத்திலுள்ள திருத்தேர்களில், மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமையை பெற்றது, அவிநாசிலிங்கேஸ்வர் கோவில். சிறப்பு பெற்ற இக்கோவிலுக்கு, உப கோவிலாக, அதன் தெற்கு பகுதியில், ஆகாச ராயர் கோவில் உள்ளது.

பக்தர்கள் சிலர் கூறியதாவது: இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்து, 15 ஆண்டுகள் ஆன நிலையில், திருப்பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. இதனால் கோவில், நாளுக்கு நாள் சிதிலமடைந்து வருகிறது. இந்து அறநிலையத்துறையும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. இந்நிலையில், கோவிலில் தொடர்ந்து ஆகமவிதி மீறி, சன்னதிகள் அமைக்கப்படுகின்றன. கோவிலில், கிடா வெட்டும் இடத்தில், சில ஆண்டுகளுக்கு முன், சுப்பிரமணியர் சன்னதி கட்டினர். இதற்காக அறநிலையத்துறையில் எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை. தற்போது அதே இடத்தில் சனீஸ்வர பகவான் சிலையை, பிரதிஷ்டை செய்ய சில பூசாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்து தர்மத்தை பொறுத்தவரை, ஒவ்வொரு கடவுளுக்கு கோவில், சன்னதி அமைக்க உரிய ஆகம விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், ஆகாசராயர் கோவிலில், இந்த விதிகளை யாரும் கடைப்பிடிப்பதில்லை. கோவில் நிர்வாக அதிகாரியும் எதையும் கண்டுகொள்வதில்லை. இப்படியே போனால், கோவிலிலுள்ள சிலைகள், பொருட்கள் கூட மாயமாகிவிடும். எனவே, ஆகாச ராயர் கோவிலில் நடந்துள்ள, நடந்து வரும் ஆகம விதிமீறல்களை கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தர்மம் காக்க வேண்டும்.

அவிநாசி லிங்கேஸ்வரர்கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டி கூறுகையில், “ஆகாச ராயர் கோவிலில், ஆகம விதிமீறி சிலைகள் எதுவும் வைக்கப்படவில்லை. இது தொடர்பான புகார் எதுவும் வரவில்லை. அக்கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன், உபயதாரர்கள் கூட்டம் கூட்டப்பட்டு, திருப்பணிக்கான பூர்வாங்க பணி துவங்கும்," என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !