நவீன நீர்மூழ்கி கருவி வாயிலாக மயில் சிலை தேடும் பணி தீவிரம்
சென்னை, :மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், புன்னைவனநாதர் சன்னிதியில், லிங்கத்தை மலரால் அர்ச்சிக்கும் மயில் சிலை இருந்தது. 2004ம் ஆண்டு கும்பாபிஷேகத்திற்குப் பின் அந்த சிலை மாயமானதால், அதற்கு பதிலாக பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைக்கப்பட்டிருந்தது.
இது ஆகம விதிகளுக்கு எதிரானது எனக் கூறி, ஏற்கெனவே இருந்த சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதில், குளத்தில் சிலை உள்ளதா என்பதை கண்டறிய, நீதிபதிகள் கால அவகாசம் வழங்கினர்.இதையடுத்து, கபாலீஸ்வரர் கோவில் குளத்தில், கடந்த 14ம் தேதி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு வாயிலாக மயில் சிலையை தேடினர். பிரத்யேக கருவிகளுடன் நீச்சல் வீரர்களும் தேடியும் மயில் சிலை சிக்கவில்லை.பின், கோவில் பங்குனி விழா முக்கிய நிகழ்வுகள் நடந்ததால், தேடும் பணி நிறுத்தப்பட்டது. நேற்று மீண்டும் சிலை தேடும் பணி துவக்கப்பட்டது. இம்முறை, தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்தின் நவீன நீர்மூழ்கி கருவி வாயிலாக, நேற்று காலை குளத்தில் உள்ள மண்ணின் தன்மை, ஆழம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். சிலை கிடைக்காததால், தேடுதல் பணி தொடரும் எனக் கூறப்படுகிறது.