திருச்செந்தூரில் கட்டுப்பாடு; தனி நீதிபதி உத்தரவுக்கு தடை
மதுரை: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பல்வேறு கட்டுப்பாடுகளை செயல்படுத்த, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு, இடைக்கால தடை விதித்துள்ளது.
மனு தாக்கல்: துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கைங்கர்யம் செய்ய தடை விதித்ததை எதிர்த்தும், தன்னை திரிசுதந்திரர்கள் என்ற அடிப்படையில் அனுமதிக்க உத்தரவிடக் கோரியும், சீத்தாராமன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.தனி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் பிற மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட வி.ஐ.பி.,க்களை மட்டுமே, கோவில் நிர்வாகம் முறைப்படி அனுமதித்து, மரியாதை அளிக்க வேண்டும். திரிசுதந்திரர்கள் கோவிலில் சட்டவிரோதமாக நடந்து கொண்டால், வழக்குப் பதிய வேண்டும் என, தெரிவித்திருந்தார்.
சுப்பிரமணிய சுவாமி கோவில் சுதந்திர பரிபாலன ஸ்தலத்தார் சபா தலைவர் குமார் அய்யர், தனி நீதிபதி உத்தரவின் சில பகுதிகள், எங்கள் உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளது. அதற்கு தடை விதிக்க வேண்டும் என, மனு செய்தார்.நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது. குமார் அய்யர் மற்றும் சீத்தாராமன் தரப்பு, இது பணியாளர் சம்பந்தப்பட்ட வழக்கு. பொதுநல வழக்கு போல் கருதி, தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தது.
நடவடிக்கை: தமிழக அரசுத் தரப்பு, பக்தர்களை சமமாக நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, தெரிவித்தது.நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து, விசாரணை இன்றைக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனர்.