மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு கட்டணம் வசூல்: பக்தர்கள் எதிர்ப்பு
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகல்யாணத்திற்கு ரூ.500, ரூ.200 கட்டாய தரிசன கட்டணம் வசூலிப்பதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் 2 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் திருக்கல்யாணத்தை காண இலவச தரிசனம் உண்டு என்றாலும், கட்டண தரிசனத்திற்கு ஹிந்து அறநிலையத்துறை முக்கியத்துவம் கொடுத்துள்ளதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறியதாவது: பக்தர்களிடையே கட்டாய வசூல் என்பதை ஏற்கமுடியாது. 2 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கல்யாணம் நடந்தபோது பக்தர்கள் விருப்பத்துடன் கொடுக்கும் கட்டணத்தை பெற்றுக்கொள்வர். வீரவசந்தராயர் மண்டப தீ விபத்து மறுசீரமைப்பிற்காக கிழக்கு கோபுர வாசல் வழியாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலவச தரிசனத்திற்கு தெற்கு கோபுர வாசல் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு வாசல்களின் நுழையும் இடத்திலேயே கட்டாய தரிசன கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருக்கல்யாணத்தில் கலந்துகொள்ள நினைத்திருந்த எங்களுக்கு இது ஏமாற்றமாக உள்ளது என்றார்.