திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் வரும் 14ம் தேதி குருபெயர்ச்சி விழா
தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா வரும் 14ம் தேதி நடக்கிறது. தஞ்சாவூர் அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றாகும். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற கோவிலாகும். வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் சுயம்புவாக தோன்றியதால் தான் தோன்றீஸ்வரர் என்ற பெயர் கொண்டவர். மூலஸ்தான விமானத்தில் சந்திரகாந்தக்கால் வைத்து கட்டப்பட்டுள்ளது.
அக்கல் சந்திரனில் இருந்து வரும் கதிர்களால் காற்றில் இருந்து ஈரப்பதத்தை தன்னுள் உறிஞ்சி 24 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர் மூலவர் வசிஷ்டேஸ்வரர் மீது விழும். இத்தகையை சிறப்பு பெற்ற கோவிலில் நவக்கிரகங்களில் சுபகிரகமான குருபகவான் எங்கும் இல்லா சிறப்போடு சாமிக்கும், அம்மனுக்கும் இடையில் தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது குருபெயர்ச்சியாகும். இந்த ஆண்டிற்கான குருபெயர்ச்சி விழா வருகிற 14ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 4.16 மணிக்கு குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதையொட்டி குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறுகிறது. மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்வது அவசியம். குருபெயர்ச்சியையொட்டி வருகிற 24ம் தேதி லட்சார்ச்சனை நடக்கிறது. அதைத்தொடர்ந்து 29ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை 2 நாட்களுக்கு பரிகார ஹோமம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.