ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவம் துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவம் நேற்று முதல் துவங்கியது. இதனை முன்னிட்டு 40 வருடங்களுக்கு பிறகு நீராழிகுளம் மண்டபத்தில் ஆண்டாள், ரங்கமன்னார் எழுந்தருளினார். ஆண்டுதோறும் ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவம் நடப்பது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கோயில் வளாகத்தில் வசந்த உற்சவம் பக்தர்கள் இன்றி நடந்தது. தற்போது கட்டுப்பாடுகள் முழு அளவில் தளர்த்தப்பட்டு வழக்கமான முறையில் கோயில் ஜ திருவிழாக்கள் துவங்கியுள்ளது.
இதன்படி நேற்று மாலை 6:00 மணிக்கு கோயிலில் ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து சந்தனகாப்பு சாற்றப்பட்டு, மலர் சட்டை அணிவிக்கப்பட்டு நீராழி மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு சாரதி பட்டர் சிறப்பு பூஜைகளை செய்தார். 40 வருடங்களுக்கு பிறகு முதன் முறையாக நீராழிகுளம் மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரங்கமன்னாரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, வேதபிரான் சுதர்சன், அரையர் முகுந்தன், ஸ்தானிகர் ரமேஷ், மணியம் கோபி, கோயில் பட்டர்கள் பங்கேற்றனர். நேற்று முதல் துவங்கிய இவ்விழா, ஏப்ரல் 16 சித்ரா பவுர்ணமி வரை 10 நாட்கள் நடக்கிறது.