ஒட்டன்சத்திரம் அருகே 400 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே சில்வார்பட்டியில் 400 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சில்வார்பட்டியில் பழமையான சிற்பம் இருப்பதாக ஆசிரியர் முருகானந்தம் கொடுத்த தகவலின்படி மதுரை பாண்டிய நாட்டுப் பண்பாடு மையத்தின் வரலாற்று ஆய்வாளர் முனைவர் மு .லட்சுமண மூர்த்தி திண்டுக்கல் நேருஜி நினைவு நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் வு.அரிஸ்டாட்டில் ஆகியோர் கொண்ட குழு ஆய்வு செய்தபோது அங்கு 4 நடுகற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் காலம் கி.பி .17 ம் நூற்றாண்டாகும்.
இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது: சங்ககால தொடக்கத்திலிருந்து நடுகல் வழிபாட்டு முறை இருந்து வருகிறது. குறிப்பாக போரில் வீரமரணமடைந்த வீரனின் பெருமையை பறைசாற்ற வைக்கப்படுவது நினைவுகல் ஆகும். சில்வார்பட்டியில் கண்டறியப்பட்ட மூன்று நடுகற்கள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது ஆனால் இந்த நடுகற்கள் வெவ்வேறு அமைப்புடன் கருங்கல் புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் சிற்பம் 3 அடி நீளமும் 1.5 அடி அகலமும் கொண்டு, மூன்று சிற்பம் நின்ற நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில் வீரனின் கையில் அம்பு எய்தவாரும் சரிந்த கொண்டை கொண்ட இரண்டு பெண்கள் கைகளை உயர்த்தியவாரும் தேய்ந்த முகத்துடன் காணப்படுகிறது. மற்றொரு சிற்பம் 2 அடி அகலம் 3 அடி உயரம் கொண்ட புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது இச்சிற்பம் ஆநிரை கவர்தல் நடுகல் என்பார்கள். குறிப்பாக ஆநிரை கவர்தலில் போரிட்டு வீரமரணம் அடைந்த வீரனின் நினைவாக வைக்கப்படும் நினைவுகல். இந்த சிற்பத்தின் அருகே காளையின் உருவம் வீரனின் கழுத்தில் சரபலி இடுப்பில் குறுவாள் கைகளில் வளையல் அணிந்து இடது கையில் வில் தொங்கவிடப்பட்டுள்ளது. வலது கையில் இடுப்பின் கச்சைப்பட்டையில் குருவாளை பிடித்தவாறு முறுக்கு மீசையுடன் நின்றவாறு காட்சி அளிக்கிறான். வீரனின் அருகில் உச்சிக் கொண்ட யும் கழுத்தில் வட்டவடிவ வளையமும் அணிந்த நிலையில் வீரனின் மனைவி, மகளின் சிற்பமும் பொறிக்கப்பட்டுள்ளது.
அடுக்கு நிலை நடுகல் என்பது ஒரு இனக் குழுவை பாதுகாத்து வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக எடுக்கக்கூடிய கல். இங்கு கண்டறியப்பட்ட நடுகல் இரண்டு அடுக்குகளை கொண்டவை. இந்த நடுகல் 1.5 அடி அகலமும் 4 அடி உயரம் கொண்டவை. முதல் அடுக்கில் போருக்கு செல்வதுபோல் உள்ள காட்சியும், இரண்டாவது அடுக்கில் வில்வீரன் ஆயுதங்கள் கொண்டு குடும்பத்தோடு புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது மற்றொரு சிற்பத்தில் தனியாக வீரன் நீண்ட பட்டா கத்தியுடன் அழகிய அணிகலன்களுடன் முகம் தேய்ந்து நின்றவாறு காட்சி தருகிறான் இச்சிற்பங்களை ஆய்வு செய்தபோது கி.பி. 17 ம் நூற்றாண்டில் இப்பகுதியில் இணக்குழு மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களாக அறியமுடிகிறது என்றனர்.