மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்திய நாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயில் பழமைவாய்ந்த சிவாலயமாக திகழ்கிறது.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அனுக்ஞை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை 9 மணியளவில் கோயில் முன்புறம் உள்ள கொடிமரத்தில் கொடி பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் யாகசாலை பூஜை சுவாமி ரக்ஷாபந்தனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்களும் காலை 9 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும் சுவாமி உள் வீதி புறப்பாடும் நடக்கிறது. ஏப்., 16 அன்று கோயில் அருகே உள்ள மாரியூர் கடலில் காலை 7 மணிக்கு வலைவீசும் படலம் நடக்க உள்ளது. அன்றைய தினம் சிவபெருமான் வேடமணிந்த சிவாச்சாரியார் படகில் சென்று வலை வீசுவார். அப்பொழுது பெரிய அளவிலான சுறாமீன் பிடிபடுவது போல் காட்சி நிகழ்த்தி காண்பிக்கப்படும். திருவிளையாடற்புராணத்தில் வலைவீசும் படலம் குறித்து பக்தர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். அதன்பின்னர் காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்ஸவமும், மாலையில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வீதியுலாவும், கொடி இறக்கமும் செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் சரண்யா, பேஷ்கார் சீனிவாசன், மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் ஆகியோர் செய்து வருகின்றனர்.