உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேட்டராய சுவாமி கோவில் தேரோட்டம்: மூன்று மாநில பக்தர்கள் தரிசனம்

பேட்டராய சுவாமி கோவில் தேரோட்டம்: மூன்று மாநில பக்தர்கள் தரிசனம்

ஓசூர்: தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி மற்றும் கோபசந்திரம் தட்சிண திருப்பதி கோவில் தேரோட்டத்தில், மூன்று மாநில பக்தர்கள்பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் பழமையான சவுந்தர்யவள்ளி உடனுறை பேட்டராய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் ஏப்.,ல் நடக்கும். கடந்த இரு ஆண்டுகளாக, கொரோனா காரணமாக தேரோட்டம் நடக்கவில்லை. இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம், 27ல் பால்கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை, 10:20 மணிக்கு நடந்தது. கிருஷ்ணகிரி காங்.,–எம்.பி., செல்லக்குமார், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன், தாசில்தார் குருநாதன், தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., தலைவர் சீனிவாசன் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேர் வடம் பிடித்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மாலையில் நிலையை அடைந்தது. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் வந்திருந்த பல ஆயிரம் பக்தர்கள், தேர் மீது உப்பு, மிளகு, வாழைப்பழம் ஆகியவற்றை வீசி, சுவாமி தரிசனம் செய்தனர். தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., கிருத்திகா தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சுப்பிரமணியம் உட்பட, 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல், கோபசந்திரம் தட்சிண திருப்பதி வெங்கடேஷ்வரா சுவாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று காலை நடந்தது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, முக்கிய வீதிகள் வழியாக சென்றது. விழாவையொட்டி, ஸ்ரீவாரி அபிஷேகம், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து நடந்த பல்லக்கு மற்றும் வசந்த உற்சவத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !