ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணம்!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு, நேற்று சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு தபசு மண்டகப்படியில் இருந்து பர்வதவர்த்தினி அம்பாள், தோழியருடன் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலித்தார். இரவில் மூன்றாம் பிரகாரம் தெற்குபகுதி நெற்களஞ்சிய மூலையில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார மேடைக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் விநாயகர், முருகன் ஆகியோர் எழுந்தருளினர். பின் சிறப்பு பூஜைகள் நடந்தன. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க உலக நன்மைக்காக இரவு 8.30 மணிக்கு அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. விஜய், போகில் குருக்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் குமரன்சேதுபதி, இணை கமிஷனர் ஜெயராமன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.