உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்காமீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நிதி!

திருக்காமீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நிதி!

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: நமச்சிவாயம்: வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் எண்ணம் அரசுக்கு உள்ளதா...
முதல்வர் ரங்கசாமி: கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
நமச்சிவாயம்: அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா... முதல்வர்: நிதி ஒதுக்கவில்லை.
நமச்சிவாயம்: தேவையான நிதியை ஒதுக்கி தர அரசு முயற்சி எடுக்குமா...
முதல்வர்: கும்பாபிஷேக வேலைகள் துவக்கப்பட்டவுடன், உரிய நிதி ஒதுக்கப்படும்.
நமச்சிவாயம்: திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என, கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. நிதியை ஒதுக்கி தந்தால்தானே, கும்பாபிஷேக வேலையை துவக்க முடியும்.
முதல்வர்: பழமைவாய்ந்த அந்த கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் செய்ய வேண்டியது அவசியமாகும். இதற்காக அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு, திருப்பணிக்கான மதிப்பீட்டை தயாரிக்கிறது. உரிய நிதியை அரசு ஒதுக்கி தரும்.
நமச்சிவாயம்: இந்த நிதியாண்டில் தரப்படுமா...
முதல்வர்: அந்த ஊரில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செய்ய வேண்டும்.
நமச்சிவாயம்: கோவில் விஷயத்தில் நாங்கள் அரசியல் செய்வதில்லை. ஒற்றுமையுடன் தான் செயல்படுகிறோம்.
தேனீ ஜெயக்குமார்: திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு தேர் செய்வதற்காக பணத்தை அரசு வழங்கியது. தேர் செய்வதற்கு மரமும் கொண்டு வந்து இறக்கினர். ஐந்தாண்டுகளாகியும் தேர் செய்யும் வேலை நடக்கவில்லை. ஊர் பெரியவர்களை அழைத்து அந்த பணியை ஒப்படைக்கலாம்.
முதல்வர்: வில்லியனூர், பாகூர், வீராம்பட்டினம் கோவில்களுக்கு தேர் செய்ய நிதி ஒதுக்கப்பட்டது. தேர் செய்வதற்கான மரத்தை தரப் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பினர். அங்கு தாமதம் ஏற்படுகிறது. எனவே, ஊர் பெரியவர்களை கொண்ட குழுவை அமைத்து, தேவைப்பட்டால் புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் தரத்தை உறுதி செய்து, தேர் செய்யும் பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நாஜிம்: காரைக்கால் அம்மையார் கோவிலுக்கும் தேர் செய்ய வேண்டும்.
முதல்வர்: அம்மையார் கோவிலுக்கு புதிய திருத்தேர் செய்ய வேண்டும். இதற்கு அரசு ஒத்துழைப்பு தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !