இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின் அவிநாசி சித்திரை தேரோட்டம்
அவிநாசி: இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின், பிரசித்தி பெற்ற, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம் நடத்தப்படுவது, பக்தர்களை மகிழ்ச்சியில் திளைக்க செய்துள்ளது.
காசிக்கு போக முடியலைன்னாலும் பரவாயில்ல; அவிநாசிக்கு போய்ட்டு வந்தா போதும். புண்ணியம் கிடைக்கும்... இப்படியான சிறப்பு பெற்றது தான், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை தேரோட்டம் வெகு பிரசித்தம். இந்த தேருக்கு, தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமையும் உண்டு. கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையானது இக்கோவில் என்பது, சிறப்பு. சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற இத்தலத்தில், பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர், பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஊரை அடங்க செய்த கொரோனாவின் கோர தாண்டவத்தால் கடந்த இரண்டு ஆண்டுகள் தேரோட்டம் நடத்தப்படவில்லை. இம்முறை, அடுத்த மாதம், 5ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை விழா நடக்கிறது. 12,13,14 ஆகிய தேதிகளில் தேரோட்டம் நடக்கிறது. உள்ளூர் பக்தர்கள், விழா உற்சாகத்தில் திளைக்க துவங்கியிருக்கின்றனர்.
திருநாவுக்கரசர் (அர்ச்சகர்): இரண்டு ஆண்டுகள் தேரோட்டம் நடத்தப்படாதது, பெருத்த ஏமாற்றம் தான். இந்தாண்டு தேரோட்டத்தை பக்தர்கள், ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். முந்தைய ஆண்டுகளை விட அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என, எதிர்பார்க்கிறோம். பூஜை, வழிபாடுகளை சிறப்புற செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
மகேஸ்வரி, (அவிநாசி); இரண்டு ஆண்டாக தேரோட்டம் நடத்தப்படாதது. ஒரு வகையான மன வருத்தத்தை ஏற்படுத்தியது; அசாதாரண சூழலையை உணர்வது போன்று இருந்தது. இந்தாண்டு, தேரோட்டம் நடத்தப்படுவது, மிகுந்து மகிழ்ச்சியளிக்கிறது: ஆத்ம திருப்பு ஏற்படுத்துகிறது. குடும்பத்துடன், தேரோட்டத்தில் பங்கேற்போம். கண்டிப்பாக நல்லது நடக்கும் என நம்புகிறேன்.
மஞ்சு, பூஜை பொருள் வியாபாரி: கோவில் வளாகத்தில், மூன்று தலைமுறையாக பூ மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்து வருகிறேன். இரண்டு ஆண்டாக தேரோட்டம் இல்லாதது, வருத்தமளித்தது. வியாபாரமும் இல்லை. இந்தாண்டு, தேரோட்டம், 63 நாயன்மார்கள் உற்சவம், தெப்பத்தேர் போன்ற முக்கிய விழாக்கள் சிறப்புற இருக்கும். வியாபாரமும் நன்றாக இருக்கும்.
பாபு, பூ வியாபாரி: இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின், சுவாமி, கோவிலை விட்டு வெளியே வருவது, மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த, 15 ஆண்டாக, பஞ்ச மூர்த்திக்கு மலர் அலங்காரம் செய்து வருகிறேன்; இம்முறை மிகச்சிறப்பாக செய்ய திட்டமிட்டுள்ளேன். தேர் நாட்களில் ரத வீதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டிருக்கும்; விழா உற்சாகத்தில், இரு நாள் வியாபாரம் கெடுவதை, வியாபாரிகள் பெரிதுபடுத்த மாட்டார்கள். மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வர்.
பாதுகாப்பில் கூடுதல் கவனம்: போலீசாரின் கணக்கெடுப்பு படி பொதுவாக, தேரோட்டத்தின் போது, 50 ஆயிரம் பேர் ரத வீதி, கோவில் மற்றும் பிற இடங்களில் குவிந்திருப்பர் எனக் கூறப்படுகிறது. அவிநாசி டி.எஸ்.பி., பவுல்ராஜ் கூறுகையில்,"இரண்டு ஆண்டுக்கு பின், தேரோட்டம் நடத்தப்படுவதால், கூட்டம் அதிகம் வரும் என, எதிர்பார்க்கிறோம். பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் திரண்ட கூட்டம், ஒரு முன்னுதாரணமாக இருந்தது. எனவே, தேரோட்டத்தின் போது, கூடுதல் போலீசாரை பணியமர்த்தி, பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்" என்றார்.