காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் விரைவில் திருப்பணி: சேகர்பாபு
சென்னை, :காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணி விரைவில் துவக்கப்படும், என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:தி.மு.க., - எழிலரசன்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், முற்கால சோழ மன்னர்களால் கட்டப்பட்டதற்கு அடையாளமாக, கரிகால் சோழன் சிலை அங்கு உள்ளது. கி.பி., 1585ம் ஆண்டு மகேந்திரவர்ம பல்லவன், இடபேஸ்வரர் சன்னதியை கட்டியுள்ளார். கி.பி., 1630ல் யுவான் சுவாங் இக்கோவிலுக்கு வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது.
கி.பி., 1120ல் முதலாம் குலோத்துங்க சோழன், துர்க்கை சன்னதி அமைத்துள்ளார். இரண்டாம் ராஜராஜசோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன் திருப்பணி செய்துள்ளனர். விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர், 192 அடி உயர தெற்கு ராஜகோபுரத்தை கட்டியுள்ளார். நுாற்று கால் மண்டபத்தை, ஆயிரங்கால் மண்டபமாக மாற்றி உள்ளார்.இத்தகைய சிறப்பு வாய்ந்த, இக்கோவிலின் மேற்கு ராஜகோபுரம் சிதிலமடைந்துள்ளது; அதை சீரமைத்து தர வேண்டும்.அமைச்சர் சேகர்பாபு: இக்கோவில், 1,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. மேற்கு கோபுரம், 120 அடி உயரமுடையது. சிதிலமடைந்து பயன்பாட்டில் இல்லை. தெற்கு கோபுரம் பயன்பாட்டில் உள்ளது.கடந்த மாதம் நேரடியாக சென்று ஆய்வு செய்தேன். கோபுரம் கட்ட மாநில குழுவுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், கோபுரத்துக்கான பணி மேற்கொள்ளப்படும்.எழிலரசன்: இக்கோவிலில், சம்பந்தர், சுந்தரர் பாடியள்ளனர். மாணிக்கவாசகர் கோவிலுக்கு வராமலே, அங்குள்ள இறைவன் குறித்து பாடியுள்ளார். இக்கோவில், 23.5 ஏக்கர் நிலப்பரப்பில், ஐந்து பிரகாரத்துடன் அமைந்துள்ளது. இக்கோவிலில் இறுதியாக, 2006ல் திருப்பணி நடந்துள்ளது; அதன்பின் நடக்கவில்லை. எனவே, ராஜகோபுரத்தை சீரமைப்பதுடன், ஒட்டுமொத்தமாக கோவிலுக்கு திருப்பணியும் செய்ய வேண்டும். அமைச்சர் சேகர்பாபு: ஆயிரங்கால் மண்டபம், எட்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. அதை திறந்து, பக்தர்கள் பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளோம். கோவில் திருப்பணிகளை செய்ய, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கூடிய விரைவில் பணிகள் துவக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.