ஸ்ரீவைகுண்டத்தில் ஒரே நேரத்தில் 4 கருடசேவை: பக்தர்கள் பரவசம்
ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டத்தில் நவ திருப்பதிகளின் நான்கு பெருமாள்களின் கருடசேவையை ஒரே இடத்தில் கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி நதிக்கரையில் நம்மாழ்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள் உள்ளன. அவற்றில் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை பிரம்மோஸ்தவம், கடந்த 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஐந்தாம் திருநாளான நேற்று காலையில் ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான், ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்ற பெருமாள், திருப்புளியங்குடி காய்சினி வேந்த பெருமாள், நத்தம் எம் இடர்கடிவான் ஆகியோருக்கு சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம் நடந்தது. பின், மாலையில் அனைத்து பெருமாள்களுக்கும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சுவாமி நம்மாழ்வாருக்கு எதிர்சேவையாக ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான், ஆழ்வார்திருநகரி, திருப்புளியங்குடி நத்தம் சுவாமிகள் காட்சி அளித்தனர். கருட வாகனம் மற்றும் அன்ன வாகனத்தில் நம்மாழ்வார் திருவீதி புறப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நவதிருப்பதி பெருமாளின் நான்கு கருடசேவையை ஒரே இடத்தில் கண்டு மகிழ்ந்தனர்.