கோவில் வளாகத்தில் காட்டு யானை; பக்தர்கள் பீதி
கோத்தகிரி: கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில், குஞ்சப்பனை ஸ்ரீ மாரியம்மன் கோவில் வளாகத்தில், காட்டு யானை நடமாடியதால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், யானை, கரடி மற்றும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது தொடர்கிறது. இந்நிலையில், கோத்தகிரி குஞ்சபனை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேற்று முன்தினம் சாமி தரிசனம் செய்திருந்தனர். அப்போது, காட்டில் இருந்து வெளியேறிய யானை, சாலையை கடந்து கோவில் வளாகத்திற்குள் நுழைய முயன்றது. இதனால், அச்சம் அடைந்த பக்தர்கள் அலறியடித்து ஓடினர். டிரைவர்கள், வாகனங்களை ஆங்காங்கு நிறுத்தினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த ஆதிவாசி மக்கள் மற்றும் பக்தர்கள் விரட்டியதை அடுத்து, யானை காட்டுக்குச் சென்றது. இதனையடுத்து பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.
நாயை இழுத்து சென்ற சிறுத்தை: கோத்தகிரி - கோடநாடு சாலையில், புதூர் பகுதியில் முருகன் என்பவரது வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை, அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை நேற்று முன்தினம் அதிகாலை, இழுத்துச் சென்றது. இந்த நிகழ்வு, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது. வனத்துறையினர் யானை மற்றும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து, அவைகளை, பாதுகாக்கப்பட்ட அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.