அடுத்தடுத்து நடக்கும் ஆன்மிக விழா விபத்துகள்: பக்தர்கள் அதிர்ச்சி
சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கோவிட் பரவலால் ஆன்மிக வழிபாடுகள், நிகழ்ச்சிகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. கோவிட் பரவல் குறைந்ததை அடுத்து கோவில் விழாக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கோவில் விழாக்கள் சிறப்பாக நடைபெற்றது. ஆனால், சில இடங்களில் அசம்பாவிதங்களும் நடந்துள்ளன. அடுத்தடுத்து ஆன்மிக விழா விபத்துகள் நடப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டிசம்பர் 1: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பர் 1ம் தேதி மாலையில் பட்டர்கள் அர்த்த மண்டப கதவை திறந்தபோது தரையில் விரிக்கப்பட்டிருந்த மேட் தீப்பிடித்து புகைந்து கொண்டிருந்தது. உடனடியாக தீ அணைக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடந்தன. முதற்கட்ட விசாரணையில், மண்டபத்தில் சர விளக்கு ஒன்றின் திரி பட்டு எரிந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.
மார்ச் 7: கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டையில் நடைபெற்ற கோவில் தேர் திருவிழாவின்போது திடீரென சாரல் மழை பெய்த நிலையில், தேர் வழுக்கி தெருவிலேயே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், தேரில் அமர்ந்திருந்த பூஜாரி காயமடைந்தார்.
மார்ச் 10: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உஸ்கூரில் 120 அடி உயர தேர் சாய்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை.
மார்ச் 12: கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர்பழனியூரில் மாகாளியம்மன் கோவில் தேர், சாலையோர கால்வாயில் இறங்கி விபத்து.
மார்ச் 22: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோவில் தேரோட்டத்தின் போது, தேர் அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
மார்ச் 22: ஈரோடில் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 10 மணியளவில் ஜவுளிகளை ஏற்றி வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கோவில் அருகே இருந்த கடைகள் முன்பு போடப்பட்டிருந்த பந்தல் மீது மோதியது. நல்ல வேலையாக யாருக்கும் பாதிப்பில்லை.
ஏப்ரல் 16: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உட்பட இரண்டு பக்தர்கள் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஏப்ரல் 20: கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் தேர்த்திருவிழாவின் போது தேரோட்டத்தை காண அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பால்கனியில் ஏராளமான மக்கள் ஏறி இருந்தனர். தேர் வீட்டின் அருகே வந்தபோது திடீரென வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஏப்ரல் 26: நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையில் உள்ள இ.பி.காலனியில் மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேரோட்டத்தின்போது தேரின் மேற்புறம் இருந்த கலசங்கள் மின்சார கம்பி மீது உரசியது. இதனால் தேர் திடீரென தீப்பிடித்தது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டும் கம்பியில் மின்சாரம் வந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையறிந்த மின்வாரிய ஊழியர்கள் அதனை சரிசெய்ய முயன்றனர். அப்போது குமரேசன் என்னும் ஊழியர் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார்.
ஏப்ரல் 27: தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு தேர் திருவிழாவில் தேரின் அலங்கார பந்தலில் மின்சார கம்பி உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர், 15 பேர் காயமடைந்தனர்.இப்படி, அடுத்தடுத்து ஆன்மிக விழாக்களில் விபத்துகள் நடப்பது, ஆன்மிகவாதிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.