உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்டுமாரியம்மனுக்கு அக்னிச்சட்டி ஏந்தி 2000 பக்தர்கள் நேர்த்திக்கடன்

தண்டுமாரியம்மனுக்கு அக்னிச்சட்டி ஏந்தி 2000 பக்தர்கள் நேர்த்திக்கடன்

கோவை : தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், 2000 பக்தர்கள் அக்னிச்சட்டி ஏந்தி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா துவங்கிய நாளில் இருந்து, இரவு 8:00 மணிக்கு, குதிரை, சிம்மம், அன்னம் மற்றும் பூப்பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில், அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடந்தன.

சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான, அக்னிச்சட்டி ஊர்வலம் நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள், கோவை பெரியகடை வீதியில் உள்ள, கோனியம்மன் கோவில் முன் திரண்டனர். பின்னர் அங்கிருந்து சுமார் 2000 பக்தர்கள், கைகளில் தீச்சட்டி ஏந்தியபடி ஊர்வலமாக புறப்பட்டனர். கரகம், பால்குடம் எடுத்து வந்ததுடன், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.அக்னிச்சட்டி ஊர்வலம் கோனியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு, டவுன்ஹால், ஒப்பணக்காரவீதி, லிங்கப்ப செட்டிவீதி, சிரியன் சர்ச்ரோடு, புரூக்பாண்ட் ரோடு, அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதி, சோமசுந்தரம் மில் ரோடு வழியாக அனுப்பர்பாளையம் நஞ்சப்பா ரோட்டை அடைந்து, அவினாசி ரோடு மேம்பாலத்தின் கிழக்கு பகுதி வழியாக, அவிநாசி ரோட்டில் உள்ள தண்டுமாரியம்மன் கோவிலை மதியம், 1:00 மணிக்கு வந்தடைந்தது. தண்டுமாரியம்மன் கோவில், செயல் அலுவலர் வெற்றிச்செல்வன் கூறுகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக, தண்டுமாரியம்மன் சித்திரைத் திருவிழா நடக்கவில்லை. அதனால் இந்த ஆண்டு, விழா மிகவும் சிறப்பாக இருந்தது. அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் எண்ணிக்கையும், பங்கேற்ற பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !