திருதிகேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு
காஞ்சிபுரம்: ஆரியபெரும்பாக்கம் திருதிகேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக பூஜை, நிறைவு பெற்றது. காஞ்சிபுரம் அடுத்த ஆரியபெரும்பாக்கத்தில், 700 ஆண்டுகளுக்கு முன், விச்சாவநீத பல்லவ மன்னரால் உருவாக்கப்பட்ட திருதிகேஸ்வரர் கோவில் உள்ளது.கிராம மக்கள் சார்பில், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட இக்கோவில் கும்பாபிஷேகம், கடந்த மாதம் 13ல் விமரிசையாக நடந்தது.
கும்பாபிஷேகத்தை ஒட்டி தொடர்ந்து, கோவிலில் தினமும் மண்டலாபிஷேக பூஜை நடந்து வந்தது. இதில், 48வது நாளான நேற்று, மண்டலாபிஷேக பூஜை நிறைவு விழா நடந்தது.காலை 9:00 மணிக்கு, பால் குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. சந்தன காப்பு அலங்காரமும், மஹா தீப ஆராதனையும் நடந்தது.மாலை 5:00 மணிக்கு வாக்கீசர் அடியார் திருக்கூட்டத்தினரால், கணபதி வேள்வி மற்றும்கலச பூஜையுடன் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. இரவு 7:00 மணிக்கு ஆரியபெருமாம்பாளுடன், மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய திருதிகேஸ்வரர், முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து, சுவாமியை வழிபட்டனர்.