குந்தா தூனேரியில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ஊட்டி: குத்தா தூனேரி கிராமத்தில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.மஞ்சூர் அருகே குந்தா தூனேரி கிராமத்தில், 1944 ம் ஆண்டில் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற ஸ்ரீமன் நாராயணமூர்த்தி கோவில் உள்ளது. அதே கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோவில், ஹெத்தையம்மன் கோவில்கள் உள்ளன. மூன்று கோவில்களை வர்ணம் பூசி பொலிவுப்படுத்தப்பட்டது. இதற்கான மகா கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை புனித தீர்த்தத்தில் இருந்து கும்ப நீர் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு மஹா கணபதி ஹோமம், தீபாராதனை, கலச பிரதிஷ்டை தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. 9:30 மணிக்கு திருப்பதி சுவாமிஜி தலைமையில் ஸ்ரீமன் நாராயணமூர்த்தி மற்றும் சக்தி மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. திரளான கிராம மக்கள், உறவினர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கிராம மக்கள் கலாச்சார உடை அணிந்து ஆடி, பாடி மகிழ்ந்தனர்.