அட்சய திரிதியை : இன்று செய்யும் தானம் மிக உயர்ந்த பலனளிக்கும்!
அட்சய திரிதியை விழாவை தானத்திருவிழா எனலாம். இன்று செய்யும் தானம் மிக உயர்ந்த பலனளிக்கும். ஏழைகளுக்கு தயிர்ச்சாதம், தண்ணீர் கொடுப்பது சிறந்த தர்மம். இதற்கடுத்த நிலையில் கோதுமை தானியம், மாவு, கோதுமை பண்டங்கள் தானம் செய்யலாம். இவற்றை விட, ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு உதவுவது இன்னும் சிறப்பு. உணவை வீணாக்கக் கூடாது என்பது இந்த நாளின் நோக்கம். வரவுக்குள் செலவழிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் கடன் வாங்கக் கூடாது.
பாருங்க! பலன் பெறுங்க!: பாற்கடலில் இருந்து மகாலட்சுமி அவதரித்ததும், அவளை அஷ்டதிக்கில் உள்ள எட்டு யானைகள் தம் மனைவியரான பெண் யானைகளுடன் கங்கை நீரால் நீராட்டின. பல்லவ மன்னர்கள் கட்டிய குடைவறைக் கோயில்களில் யானைகள் நீரை முகந்து நீராட்ட, தாமரையில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமியைக் காணலாம்.
யானைகளின் பிளிறல் ஓசையை மகாலட்சுமி விரும்பிக் கேட்கிறாள் என்கிறது வேதம். பசுக்களின் பின்புறத்தில் லட்சுமி வசிக்கிறாள். எனவே, பசுக்களின் பின்புறத்தில் மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு பூஜிப்பர்.கிரகப்பிரவேசம் நடத்தும்போது, பசுக்களை வீட்டிற்குள் அழைத்துச் செல்வதன் மூலம் மகாலட்சுமியே நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம். எனவே அட்சயதிரிதியை நாளில் லட்சுமியின் அம்சமாக விளங்கும் யானை, பசுக்களை பார்த்தாலே புண்ணியம் உண்டாகும்.
உடல்நலம் பெற... : அட்சய திரிதியை அன்று மகாலட்சுமிக்கு விருப்பமான தங்கத்தை வாங்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அன்று அரிசி, மஞ்சள், உப்பு வாங்கினாலும் நன்மை உண்டாகும். நோயால் வாடுவோருக்கு மருந்து வாங்கி கொடுப்பவர்கள் உடல்நலம் பெறுவர்.
குசேலர் குபேரர் ஆன நாள்: கிருஷ்ணரைக் காண அவரது பால்ய நண்பர் குசேலர் விரும்பினார். அதற்காக ஒருபிடி அவலை எடுத்துக் கொண்டு துவாரகை நகருக்கு சென்றார். கிருஷ்ணரிடம் உதவி கேட்க நினைத்தாலும், அவரைக் கண்டதும் தன் எண்ணத்தைக் கைவிட்டார். குசேலருக்கு விருந்து அளித்ததோடு, அவர் கொடுத்த அவலை ருசித்துச் சாப்பிட்டார் கிருஷ்ணர்.
அப்போது "அட்சயம்" என கிருஷ்ணர் சொல்லவே குசேலரின் குடிசை குபேர மாளிகையாக மாறியது. இந்த நாளை அட்சய திரிதியை என அழைக்கிறோம்.
சுமங்கலியாக வாழ...: துளசி, வில்வம், நெல்லி, மா ஆகியவை மகாலட்சுமியின் அம்சம். இவை இருக்கும் இடங்களில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்திலுள்ள சீனிவாசப்பெருமாள் கோயிலில் நெல்லி தலவிருட்சமாக உள்ளது. இங்கு அலமேலுமங்கைத் தாயார் தனி சன்னதியில் இருக்கிறாள். வெள்ளிதோறும் மாலையில் இவளது சன்னதியில் கோ பூஜையும், விசேஷ திருமஞ்சனமும் நடக்கும். அப்போது மங்கலச் சின்னமான மஞ்சளை பிரசாதமாகத் தருவர். இதை அணிபவர்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர்.
லட்சுமி வாசம்: திருவாரூர் தியாகராஜப் பெருமானை (சிவன்) மகாலட்சுமி வழிபட்டாள். இதனால் இக்கோயிலை கமலாலயம் என்பர். கோயில் முன்புள்ள குளத்திற்கும் கமலாலய தீர்த்தம் என்றே பெயர். கமலம் என்ற சொல்லுக்கு தாமரை என்பது பொருள். மகாலட்சுமி தாமரையில் வீற்றிருப்பவள் என்பதால் கமலா என பெயர் பெற்றாள். தியாகராஜப்பெருமான் வீற்றிருக்கும் கொலு மண்டபத்திற்கு பின்புள்ள கருவறையை லட்சுமி வாசம் என அழைக்கின்றனர்.