சவுடேஸ்வரி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா
அன்னூர்: வடுகபாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது. நாரணாபுரம் ஊராட்சி, வடுக பாளையத்தில், பிரசித்தி பெற்ற மாரியம்மன், சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பூச்சாட்டு, பொங்கல் திருவிழா கடந்த 26ம் தேதி துவங்கியது. அன்று இரவு கம்பம் நடப்பட்டு, ஏழு நாட்களாக தினமும் இரவு பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடுவதும், சிறப்பு வழிபாடும், பூவோடு எடுத்து ஆடுதலும் நடந்தது. நேற்று முன்தினம் விநாயகர் கோவிலில் இருந்து, பக்தர்கள் ஊர்வலமாக அக்னி கரகம் கோவிலுக்கு கொண்டு வரும் வைபவம் நடந்தது. நேற்று சவுடேஸ்வரி அம்மனுக்கு கொலு வைத்தலும், அணி கூடை கொண்டுவருதலும், அம்மன் அழைத்தலும் நடந்தது. கோவை, திருப்பூர் பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மதியம் பொங்கல் வைத்தும், மாலையில் முளைப்பாரி கொண்டு வருதலும், இரவு கம்பத்தை எடுத்துக் கங்கையில் விடுதலும் நடக்கிறது.