உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

அவிநாசி: இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின், அவிநாசிலிங்கேஸ்வரர் கோலில், சித்திரை தேர்த்திருவிழா, இன்று (மே, 5ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது.

கொங்கேழு தேவாலயங்களில் முதன்மையானதும், தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமை பெற்ற, அவிநாசி, ஸ்ரீகருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா விமரிசையாக நடக்கும்.கொரோனா ஊரடங்கால், கடந்த இரு ஆண்டுகளாக தேரோட்டம் நடத்தப்படவில்லை. இந்தாண்டு, தேர்த் திருவிழா கோலாகலமாக நடத்தப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை, 5:00 மணிக்கு, கொடியேற்றம் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சோமஸ்கந்தர், கருணாம்பிகை, விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழாவில் நாளை 6ம் தேதி சூரிய, சந்திர வாகன காட்சிகள், 7ம் தேதி அதிகாரநந்தி, கிளி, பூத, அன்ன வாகன காட்சிகள், 8ம் தேதி கைலாச வாகன, புஷ்ப விமான வாகன காட்சிகள் நடத்தப்பட உள்ளன.வரும், 9ம் தேதி, 63 நாயன்மார்களுக்கு பஞ்ச மூர்த்திகள் காட்சி மற்றும் புறப்பாடு, 10ம் தேதி, கற்பக விருட்சம், திருக்கல்யாண உற்சவம், யானை வாகன காட்சிகளும் நடைபெறும்.

வரும், 11ல், அதிகாலை பூர நட்சத்திரத்தில், பஞ்சமூர்த்திகள் தேருக்கு எழுந்தருளும் நிகழ்வு நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்வாக, 12ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, தேர்வடம் பிடித்தல் மற்றும் தேர் வீதிகளில் தேர்பவனி நடத்தப்படுகிறது. மதியம், 1:00 மணிக்குள், வடக்கு ரத வீதியில் நிறுத்தப்படும். 13ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, தேர் வடம் பிடித்து, நிலை நிறுத்தப்படும்.

14ம் தேதி, காலை, 8:00 மணிக்கு அம்மன் தேர் வடம் பிடித்து, தேர் வீதிகளில் பவனியாக நிலை வந்து சேரும். 15ம் தேதி காலை, வண்டித்தாரை, அன்றிரவு, பரிவேட்டை நடைபெறும். 16ம் தேதி மாலை, தெப்ப உற்சவம் நடத்தப்படும். 17ம் தேதி, நடராஜ பெருமாள் தரிசனம் மற்றும் கொடியிறக்கம் நடைபெறும். 18ம் தேதி,காலை, மஞ்சள் நீர் விழா, இரவு, மயில் வாகன காட்சி நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !