அறநிலையத் துறை சார்பில் 165 அறிவிப்பு : அமைச்சர் சேகர்பாபு
சென்னை :சட்டசபையில் ஹிந்து அறநிலையத் துறை சார்பில், பல்வேறு திட்டங்களை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து, பக்தர்கள் பயன் பெறும் வகையில், 165 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அன்னதானம் வழங்கும் திட்டம் மேலும் மூன்று கோவில்களுக்கும், இலவச பிரசாதம் திட்டம் ஐந்து கோவில்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். சட்டசபையில், ஹிந்து அறநிலையத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. அதற்கு பதில் அளித்து, அமைச்சர் சேகர்பாபு அறிவிப்புகள்:
* நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்களிலும் நடைமுறைப் படுத்தப்படும்
* பத்து கோவில்களை தொடர்ந்து, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர், மேல்மலையனுார் அங்காளம்மன், இருக்கன்குடி மாரியம்மன், ஆனைமலை மாசாணியம்மன், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவில்களிலும், பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கப்படும்
* கோவில்களுக்கு தானமாக வழங்கப்படும் கால்நடைகளை பராமரிப்பதற்காக, திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த கோயில்பதாகையில், 25 ஏக்கர் நிலத்தில், 20 கோடி ரூபாய் செலவில் பசு மடம் அமைக்கப்படும்* இறை பணியில் ஈடுபட்டு இறந்த கோவில் யானைகளை சிறப்பிக்கும் வகையில், 10 கோவில்களில் நினைவு மண்டபங்கள் அமைக்கப்படும். ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு, கோவில்களில் இலவச திருமணம் நடத்தப்படும்
* மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை தொடர்ந்து, பேரூர் பட்டீஸ்வர சுவாமி, திருநெல்வேலி நெல்லையப்பர், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்களில், மஹா சிவராத்திரி விழா நடத்தப்படும்
* ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாத சுவாமி கோவிலுக்கு, 200 பேர், 50 லட்சம் ரூபாய் செலவில் ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்படுவர். பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்கள் மற்றும் வைணவ கோவில்களுக்கு முக்கிய நாட்களில், சுற்றுலா துறையுடன் இணைந்து ஆன்மிக பயணம் ஏற்பாடு செய்யப்படும்
* துாத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அடிப்படைவசதிகள் மேம்படுத்தும் பணிகள், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்யப்படும்
* பழநி மலைக்கும், இடும்பன் மலைக்கும் இடையேயும்; கோவை அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் ரோப் கார் அமைப்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்
* திருவண்ணாமலை பருவதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர், போளூர் லட்சுமி நரசிம்மர், கோவை வெள்ளையங்கிரி ஆண்டவர், மதுரை சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி, தேனி கண்ணகி கோவில் ஆகிய மலை கோவில்களுக்கு பாதை அமைப்பதற்கு, 1 கோடி ரூபாய் செலவில் சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும்
* மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டப்படும். இக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கலாசார மையம் அமைக்கப்படும். இங்கு ஆன்மிக நுாலகம், மீட்கப்பட்ட சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்படும்
* திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, 4 கோடி ரூபாய்; தஞ்சாவூர், திருகருகாவூர் முல்லைவனநாத சுவாமி கோவிலுக்கு, 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளி தேர் உருவாக்கப்படும்
* பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு, 8 கோடி ரூபாய்; புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலுக்கு, 6 கோடி ரூபாய் செலவில் தங்கத் தேர் உருவாக்கப்படும்
* மாநிலம் முழுதும் 1,000 கோவில்களில், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பராமரிப்பு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 80 கோவில்களுக்கு, 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்
* விருதுநகர், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும்
* திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கிழக்கு பகுதி கடற்கரையில், கடல் அரிப்பு தடுப்பு பணிகள், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
* கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவிலில், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.
இவை உட்பட 165 அறிவிப்புகளை, அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.
கோவில் அலுவலகத்தில் அசைவ உணவுக்கு தடை: கோவில் அலுவலகங்களில் அவைச உணவு சாப்பிடுவதற்கு அனுமதியில்லை, என, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். சட்டசபையில் நடந்த விவாதம்:பா.ஜ.,- - சரஸ்வதி: கோவில்களில் உள்ள அலுவலகங்களில், அசைவ உணவு சாப்பிடுகின்றனர்; இதை தடுக்க வேண்டும். கோவில்களுக்கு பக்தர்கள் வழங்கிய தங்க நகைகளை உருக்கும் திட்டம், எந்த நிலையில் உள்ளது என்பதை அமைச்சர் விளக்க வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: கோவில் அலுவலகங்களில் அசைவ உணவுகளை சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை. எந்த கோவிலில் அது நடக்கிறது என்று சொன்னால், அதற்கு தடை விதிக்கப்படும்; நடவடிக்கையும் எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடை நகைகள் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை உருக்கி, இறை பணிக்கு பயன்படுத்துவதற்கு, மூன்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். முதற்கட்டமாக, விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி கோவிலில் இருந்த 27 கிலோ, 600 கிராம் தங்க நகைகள் உருக்கப்பட்டு, பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, மாதந்தோறும் கிடைக்கும் 2 லட்சம் ரூபாய், கோவில் மேம்பாட்டு பணிக்கு பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.