ஸ்ரீரங்கநாதர் கோவில் நிர்வாகத்தில் முறைகேடு
பொன்னேரி, :ரங்கநாதர் கோவில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், கோவிலை அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பொன்னேரி அடுத்த, தேவதானம் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரங்கநாதர் கோவில் உள்ளது.வட ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படும் இங்கும், ரங்கநாதர் சயன கோலத்தில் காட்சி அளிப்பது கோவிலின் சிறப்பாகும். விசேஷ நாட்களில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்து செல்கின்றனர்.கோவில் நிர்வாகத்தில் தனி நபர்கள் சிலரின் அத்துமீறல்கள் அதிகமாக இருப்பதாகவும், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது.இதை கண்டித்தும், இக்கோவில் நிர்வாகத்தினை ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நேற்று, ம.தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் துணை பொது செயலர் மல்லை சத்யா பங்கேற்று கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சியினர் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தின்போது, கோவில் நிலத்தை குத்தகைவிட்டு, அதற்கு ரசீது கொடுப்பதில்லை. கோவில் நிலங்களை மீட்க வேண்டும்.தேவதானம், காணியம்பாக்கம் கிராமத்தினருக்கு தரிசனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும்; கோவில் நிர்வாகத்தை ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.