உயிர் தியாகம் செய்ய தயங்க மாட்டோம்..: சிவ தொண்டர்கள் ஆவேசம்
ராமநாதபுரம் : ஹிந்து கடவுள் சிவபெருமானை அவமதித்தவரை தமிழக அரசு கைது செய்து, அந்த சேனலை முடக்காவிட்டால் சிவனுக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்யவும் தயங்க மாட்டோம், காசியில் இருந்து பல லட்சம் அகோரிகளை வரவழைத்து போராடுவோம், என்று ராமநாதபுரம் மாவட்ட உலக சிவனடியார்கள் திருக்கூட்ட அமைப்பின் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவ கணேசன் தெரிவித்தார்.
அவர் கூறியது: சிதம்பரம் நடராஜர் குறித்து யு 2 ப்ரூட்டஸ் என்ற யு டியூப் சேனலில் மைனர் என்ற பெயரில் அவதுாறாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய வலியுறுத்தி 38 மாவட்டங்களிலும் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் எஸ்.பி.,க்களிடம் மனு அளித்து வருகிறோம். ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.,யிடம் இப்போது மனு அளித்துள்ளோம். ஆறு கோடி சைவர்கள், வைணவர்களின் மனதை புண்படுத்தி, மதத்தை கொச்சைப்படுத்தியவர் மீது தமிழக அரசும், போலீசாரும் கைது நடவடிக்கை எடுத்து சேனலை முடக்க வேண்டும். தவறினால் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தப்படும். அதையும் கண்டுகொள்ளாவிட்டால் காசியில் இருந்து பல லட்சம் அகோரிகளை வரவழைத்து போராடுவோம். சிவனடியார்களாகிய நாங்கள் தீக்குளித்து உயிர் தியாகம் செய்யவும் தயங்க மாட்டோம், என்றார்.