முடியனுார் திரவுபதியம்மன் கோவில் 60 அடி உயர துாக்கு தேர் திருவிழா
தியாகதுருகம், தியாகதுருகம் அடுத்த முடியனுார் திரவுபதியம்மன் கோவில் 60 அடி உயர துாக்கு தேர் திருவிழா நடந்தது.விழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு அரவாண் களபலி நிகழ்ச்சி நடந்தது. பின் காளி கோட்டை இடித்து, 60 அடி உயர துாக்கு தேரில் அலங்கரிக்கப்பட்ட திரவுபதி அம்மன், அர்ஜூனன் சிலைகள் வைத்து தேரை பக்தர்கள் தோளில் சுமந்து ஊர்வலமாகச் சென்றனர்.தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.விழாவையொட்டி, மூலவர் அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஊராட்சி தலைவர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ., கோமுகி மணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.துாக்கு தேர் திருவிழா 4 நாட்கள் நடக்கும் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக திருவிழாவை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்திருந்தது. மேலும், கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடபெறாமல் இந்த ஆண்டு கோலாகலமாக நடந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.