2 ஆண்டுகளுக்குப் பின் திருக்கோஷ்டியூர் சித்திரைத் தேர் : திரளாக பக்தர்கள் பங்கேற்பு
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடந்த சித்திரைத் தேரோட்டத்தில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மே 5ல் கொடியேற்றி பிரமோத்ஸவம் துவங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த உத்ஸவத்தில் தினசரி வாகனங்களில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா இரவில் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 5:15 மணிக்கு தேருக்கு தலையலங்காரம் கண்டருளல் நடந்தது. இரவில் அன்னவாகனத்தில் திருவீதி உலா நடந்தது நேற்று காலை 8:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியருடன் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் தேரில் எழுந்ருளிய சுவாமிக்கு அர்ச்சனை செய்து, வலம் வந்து வழிப்பட்டனர். மாலை 5:00 மணிக்கு பட்டமங்கலம், மல்லாக்கோட்டை நாட்டார்கள் வருகைக்குப் பின்னர் தேரில் வடம் பிடித்து தேரோட்டம் துவங்கியது. கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்திரைத் தேரோட்டம் நடைபெறவில்லை. நேற்று தேரோடும் போது மழை பெய்தும் கிராமத்தினர் உற்சாக திரளாக பங்கேற்று தேர் வடம் பிடித்துச் சென்றனர். இன்று 11ம் திருநாளை முன்னிட்டு காலை பிரணயகலகம், மாலை பஷ்பயாகம் வாசித்தல், சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளல், நடைபெறும். நாளை 12ம் திருநாளை முன்னிட்டு இரவில் புஷ்பப்பல்லக்கு நடைபெற்று பிரமோத்ஸவம் நிறைவடையும்.