திருச்சூர் பூரம் விழாவில் மக்கள் மனம் கவர்ந்த வானவேடிக்கை
பாலக்காடு: நீண்ட நாட்கள் காத்திருப்பின் இறுதியில் திருச்சூர் பூரம் திருவிழாவின் முக்கிய அம்சமான வானவேடிக்கை நேற்று நடந்தது.
கேரள மாநிலம் உலக புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா கடந்த மே 10ம் தேதி கணிமங்கலம் சாஸ்தாவின் எழுந்தருளல், பிரஹ்மசுவம் மடத்தின் வடக்குநாகர் சன்னிதி வரவு, இலைஞ்சித்தறை மேளம், ஆடை அபரணங்கள் அணிந்த தலா 15 யானைகள் இருபுறவும் அணிவகுத்துள்ள வண்ண குடைமாற்றம் என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் பல்லாயிரக்கணகனோர் மத்தியில் வெகு விமர்சையாக நடந்தது. ஆனால் விழாவையொட்டியுள்ள பிரமாண்ட வானவேடிக்கை அன்றைய கன மழையை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இது பின்னர் இரு முறை நடத்த தேதி நிச்சயித்தும் மழை காரணமாக மீண்டும் ஒத்தி வைத்தனர். கடந்த இரு தினங்களாக மழை சற்று பொழிந்துள்ள நிலையில் நேற்று வானவேடிக்கை நடத்த அரசின் அறிவுரையின்படி கோவில் நிர்வாகம் முடிவெடுத்தனர். இதையடுத்து நேற்று பிற்பகல் 2 மணிக்கு விழாவையொட்டியுள்ள பிரமாண்ட வானவேடிக்கை நடந்தது. இதை ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர்.