சிவராத்திரி கோலாகலம்; பூசாரி காலில் பாதக்கொரடு அணிந்து பக்தி பரவசம்...
பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள வேட்டைக்கார சாமி கோயிலில் சிவராத்திரி விழாவையொட்டி, பூசாரி காலில் பாதக்கொரடு அணிந்து நடந்து வந்தார்.
கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பூச்சியூர் உள்ளது. இங்கு சிவராத்திரி விழாவை முன்னிட்டு மகாலட்சுமி கோயில், வீரபத்திர சாமி தொண்டம்மாள் கோயில், வேட்டைக்கார சாமி கோயில்களில் நேற்று இரவு விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை மகாலட்சுமி கோயில், வீரபத்திர சாமி தொண்டம்மாள் கோயில், வேட்டைக்கார சாமி கோயில் உற்சவர்கள், அலங்கரிக்கப்பட்ட நிலையில், கோயில் மைதானத்தில் இருந்து ஊர்வலமாக வந்து, அந்தந்த கோயில்களில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினர். இதில், வேட்டைக்கார சாமி கோயில் பூசாரி, காலில் பாதக் கொரடு எனும் ஆணிகள் உடைய மரத்தாலான பாதரட்ச்சைகளை அணிந்து ஊர்வலமாக வந்தார். ஊர்வலத்தில் மலைவாழ் மக்கள் தங்களுடைய பாரம்பரிய இசை கருவிகளை வாசித்து, வேட்டைக்கார சுவாமியை வரவேற்றனர். விழாவையொட்டி சிறப்பு அன்னதானம், பூஜைகள் நடந்தன. சிவராத்திரி விழாவையொட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் ஸ்ரீராம் நகரில் உள்ள விருதாம்பிகை சமேத விருத்தபுரீஸ்வரர் திருக்கோயிலில் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இடிகரை வில்லீஸ்வரர் கோயில், வடமதுரை விருந்தீஸ்வரர் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.