உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கை கொடுத்த தெய்வம்

கை கொடுத்த தெய்வம்


மகான் அப்பைய தீட்சிதரின் வழிவந்தவர் அடையப்பலம் ராமகிருஷ்ணன். மஹாபெரியவரின் பக்தரான இவரது வாழ்வில் நடந்த சில சம்பவங்களை பார்ப்போம்.
அப்பைய தீட்சிதர் 104 ஆன்மிக நுால்களை எழுதினார். இதை கேள்விப்பட்ட வேலுார் மன்னரான சின்னபொம்மன்  கனகாபிேஷகம் நடத்தி தீட்சிதருக்கு பெருமை சேர்த்தார். இதில் கிடைத்த பணத்தில்  சிவன், மகாவிஷ்ணு கோயில்களைக் கட்டினார். பிற்காலத்தில் இக்கோயில்களுக்கு கும்பாபிேஷகம் நடத்த விரும்பிய ராமகிருஷ்ணன் காஞ்சிபுரம் மடத்தில் மஹாபெரியவரை சந்தித்தார்.
‘‘கோவையில் உள்ள கிராமங்களுக்குச் சென்று அப்பைய தீட்சிதர் பற்றி சொற்பொழிவு நடத்துங்கள். அதில் வசூலாகும் பணத்தைக் கொண்டு திருப்பணி நடத்தலாம்’’ என ஆலோசனை தெரிவித்தார்.  அப்படியே செய்து மீண்டும் மஹாபெரியவரை சந்தித்தார். ‘‘என்ன... போன விஷயம் வளர்பிறையா... தேய்பிறையா...’’ எனக் கேட்க ‘‘ உங்கள் அருளால் எல்லாம் பவுர்ணமியாகவே இருந்தது’’  என்றார் ராமகிருஷ்ணன் மகிழ்ச்சியுடன். ‘‘இந்த பணத்தின் மூலம் திருப்பணி நடத்துங்கள்’’ என ஆசியளித்து விட்டு ருத்ராட்சம் ஒன்றைக் கொடுத்து வலது கையில் கட்டுமாறு தெரிவித்தார். பொதுவாக  ருத்ராட்சத்தை கழுத்தில் அணிவது தானே வழக்கம் என யோசித்தவருக்கு அதன் சூட்சுமம் புரியவில்லை.  
ஒருநாள் அவர் பஸ்சில் சென்னை பாரிமுனையில் இருந்து வில்லிவாக்கம் சென்ற போது ஜன்னலோர சீட்டில் அமர்ந்து துாங்கி விட்டார். எதிர்பாராமல் குறுக்குச் சாலையில் இருந்து வந்த லாரி ஒன்று,  பஸ் மீது மோதவே,  ராமகிருஷ்ணனுக்கு வலது கையில் பலமாக அடிபட்டது. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என குடும்பத்தினர் மஹாபெரியவரிடம் வேண்டினர். விரைவில் உடல்நலம்  பெற்றதோடு மடத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெற்றார். ஆபத்தில் இருந்து உயிர் பிழைக்கவே ருத்ராட்சத்தை கையில் கட்டச் சொல்லியிருக்கிறார் என்ற உண்மை அப்போது தான் புரிந்தது.
இதே போல இன்னொரு சம்பவமும் நடந்தது. சென்னை வானகரத்தில் முகாமிட்டிருந்தார் மஹாபெரியவர். ஒருநாள் மாலையில் அங்கு வந்த பெண் ஒருத்தி ஸ்லோகம் சொல்லியபடி நின்றிருந்தார்.  அருகில் நின்ற ராமகிருஷ்ணனிடம், ‘‘இந்த பெண் யாருடன் வந்திருக்கிறாள்’’ எனக் கேட்டார் பெரியவர். தனியாக வந்திருப்பதாக தெரிவித்தாள். ‘‘சந்திர மவுலீஸ்வரர் சன்னதிக்குப் போய் சவுந்தர்ய  லஹரி சொல்லி விட்டு வா’’  என அவளுக்கு உத்தரவிட்டார். சொல்லி முடித்ததும் அவள் விடைபெற வந்தாள். ‘‘நாளை முதல் துளசி மாடத்தில் நெய்தீபம் ஏற்று’’ என உத்தரவிட்டார். ஐந்து மாதம்  கழிந்த பின்னரே அதற்கான காரணம் புரிந்தது. சில ஆண்டுகளாக அவளை விட்டு பிரிந்த கணவர் மீண்டும் மனைவியுடன் சேர்ந்தார். தம்பதியாக அவர்கள் மடத்திற்கு வந்த போது, ‘‘யாருடன்  வந்திருக்கிறாய் என அன்று கேட்டதற்கான அர்த்தத்தை புரிந்து கொண்டேன்’’ என்றாள் அப்பெண்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !