உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மின்னொளியில் மாமல்லபுரம் கலை சிற்பங்கள்: சுற்றுலா பயணியரின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா?

மின்னொளியில் மாமல்லபுரம் கலை சிற்பங்கள்: சுற்றுலா பயணியரின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா?

மல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள தொல்லியல் கலைச் சின்னங்களில், புதிய விளக்குகள் அமைத்தும், சுற்றுலாப் பயணியரை, இரவில் அனுமதிப்பது தாமதமாகிறது. மின்னொளியில் சிற்பங்களை ரசிக்க, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

மாமல்லபுரம், சர்வதேச பாரம்பரிய கலை சுற்றுலா இடமாக விளங்குகிறது. இங்குள்ள பல்லவர் தொல்லியல் சின்னங்களை, உள்நாடு, சர்வதேச சுற்றுலாப் பயணியர் காண்கின்றனர். இவற்றை, தொல்லியல் துறை பராமரித்து பாதுகாக்கிறது.பயணியர், சிற்பங்களை காண, இத்துறை நுழைவுக்கட்டணம் வசூலிக்கிறது. காலை 6:00 மணி - மாலை 6:00 மணி வரை பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர். பிரதமர் மோடி - சீன அதிபர் ஜீ ஜின்பிங், கடந்த 2019 அக்டோபரில் முறைசாரா மாநாடாக இங்கு சந்தித்தபோது, கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை சிற்ப வளாகங்களில், பாரம்பரிய பகுதி சூழலுக்கேற்ற மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.

பயணியரும், மின்விளக்கு ஒளியில் பிரகாசிக்கும் சிற்பங்களை, இரவு 9:00 மணி வரை காண அனுமதிக்கப்பட்டனர்.பிரதமர் நிகழ்விற்காக, அவசர சூழலில் அமைக்கப்பட்ட விளக்குகள், மழை நீர் சூழ்ந்தது உள்ளிட்ட பாதிப்புகளால், நாளடைவில் பழுதடைந்தது. கொரோனா தொற்று காரணமாக, இரவு அனுமதியும் ரத்தானது.தற்போது இரவிலும் அனுமதிக்க கருதி, கடந்த பிப்ரவரியில் மழை நீரால் பாதிக்கப்படாத வகையில், சற்று உயர மேடையில், 110 வாட் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. முதல்முறையாக, உயர்கோபுர மின் விளக்குகள், கடற்கரை கோவில் பகுதியில் ஒன்பது, வெண்ணெய் பாறை பகுதியில் ஒன்று என அமைக்கப்பட்டன.சில மாதங்கள் கடந்த நிலையில், இரவில் பயணியர் அனுமதி தாமதமாகிறது. விருந்தினராக வருவோருக்கு மட்டும், மின் விளக்குகள் ஒளிர வைக்கப்படுகின்றன. கோடை விடுமுறையில், பயணியர் குவியும் நிலையில், இரவில் சிற்பங்கள் காண விரும்புகின்றனர். தொல்லியல் துறை, அவர்களின் எதிர்பார்ப்பை பரிசீலிக்க வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !