நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் வைகாசி கொடியேற்றம்
நயினார்கோவில்: பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இக்கோயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அனுக்கை, வாஸ்து சாந்தியுடன் விழா துவங்கியது. மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற பெயர் பெற்ற நாகநாதசுவாமி கோயிலில், நேற்று காலை 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வலம் வந்தார். மேலும் தினமும் காலை, மாலை இந்திர விமானம், நந்திகேஸ்வரர், ஹம்ச, பூத, சிம்ம, யானை, கைலாசம், கிளி, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி வலம் வருகின்றனர். முக்கிய நிகழ்வாக ஜூன் 8 அன்று சமணர்களுக்கு முக்தி கொடுத்தல், திருஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் ஊட்டல் நிகழ்ச்சியும், ஜூன் 10 ல் திருமுறை பட்டயம் வாசித்தல், சுந்தரமூர்த்தி சுவாமி திருஊடல் தீர்த்தல் நடக்கிறது. மேலும் ஜூன் 11 காலை 8:00 மணி முதல் 9:00 மணிக்குள் நான்கு மாட வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. ஜூன் 12 காலை தீர்த்தவாரி, கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் வைரவ சுப்பிரமணியன் செய்துள்ளனர்.