திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற அசைவ திருவிழா
திருமங்கலம்: திருமங்கலம் அருகே உள்ள சொரிக்காம்பட்டி பெருமாள் கோவில்பட்டி கிராமங்களில் காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோவிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அசைவ உணவு திருவிழா நேற்று நடந்தது.
காலை 8 மணிக்கு பொங்கல் வைத்து வழிபட்ட பின்னர் 150க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு உணவு சமைக்கப்பட்டது. இங்கு பலியிடப்படும் ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்படுவது தனிச்சிறப்பு. ஜாதி மத வேறுபாடு இன்றி சமூக நல்லிணக்கத்திற்காக கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் குழந்தை வரம், உடல் ஆரோக்கியம், வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காக நேர்த்திக்கடனாக வேண்டப்பட்டு கருப்பு நிற ஆடுகளை கோவிலில் விட்டுச் செல்வது வழக்கம். திருமங்கலம், சொரிக்காம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, கரடிக்கல், மாவிலிபட்டி, செக்கானூரணி, சோழவந்தான் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு இந்த அசைவ உணவு பிரசாதம் வழங்கப்பட்டது. சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம் ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் காய்ந்து கலைந்த பிறகு பெண்கள் கோவிலுக்கு வருவர்.