திருமலையில் பக்தர்கள் அவதியை தடுக்க பச்சை கம்பளம் விரிப்பு
திருப்பதி: திருமலை நடைபாதை மார்க்கத்தில் வெயிலின் கொடுமையால் அவதியுற்று வந்த பக்தர்கள் நடக்க வசதியாக, பச்சை கம்பளம் விரிக்கப்பட்டது.
திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் அலிபிரி நடை பாதை மார்க்கத்தில் குறிப்பிட்ட துாரம் வரை பக்தர்கள் படிகளின்றி நடக்க வேண்டி உள்ளது. நடை பாதையில் படிகள் உள்ள பகுதிகளில் தேவஸ்தானம் நிழற்கூரை அமைத்துள்ள நிலையில், இந்த இடை பட்ட பகுதியில் நிழற்கூரை இல்லை. இதனால் பக்தர்கள் இதை கடக்க மிகவும் சிரமப்பட்டனர். தற்போது கோடை காலம் என்பதால்,வெயிலின் சூடு தங்காமல் பக்தர்கள் சிரமப்படுவதாக தேவஸ்தானத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து அப்பகுதியில் சாலை ஓரத்தில் பச்சை கம்பளத்தை விரிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி சாலையின் ஓரத்தில் பக்தர்கள் நடக்க வசதியாக நேற்று பச்சை கம்பளம் விரிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் வெயிலின் சூடு தெரியாமல் மெதுவாக நடந்து சாலையை கடந்து செல்கின்றனர்.