உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு : கனகசபை மீது ஏறி நடராஜப் பெருமானை தரிசனம் செய்தார்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு : கனகசபை மீது ஏறி நடராஜப் பெருமானை தரிசனம் செய்தார்

சிதம்பரம்: திமுக ஆட்சி துலாக்கோல் போன்றது, அனைவருக்கும் சமமான நீதி வழங்கும் ஆட்சி, நடராஜர் கோயிலில் பாரம்பரியம் மாறாமல் றையன்பர்கள் சாமி தரிசனம் செய்ய எந்தவித குந்தகம் ஏற்படாமல் இருக்கவும், இறைவனுக்கும், பக்தர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் ஒரு பாலமாக இருந்து அனைத்து பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்றும், நாளையும் தமிழக அறநிலையத்துறையினர் ஆய்வு செய்ய உத்தரவிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களுக்கு கடிதம் அனுப்பினர். அதற்கு பதில் தரும் வகையில் தீட்சிதர்கள் பதில் கடிதம் அனுப்பினர். இப்படி 5 முறை மாறி மாறி அறிக்கை கொடுத்து வந்தனர். இந்நிலையில் அறநிலையத்துறை ஆய்வு நடைபெற இருந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை 7 மணிக்கு வருகை தந்தார். அவரை திமுக நகரச் செயலாளர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் அப்புசந்திரசேகரன், வெங்கடேசன், காங்., மாவட்ட துணைத் தலைவர் ஜெமினி ராதா மற்றும் நிர்வாகிகள் மாலை வரவேற்றனர். பின்னர் கோயில் பொதுதீட்சிதர்கள் கிழக்கு கோபுர வாயிலில் அமைச்சரை வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் அமைச்சர் சேகர்பு சட்டையை கழற்றிக்கு கனகசபை மீது ஏறி சித்ரசபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை தரிசனம் செய்தார். பொதுதீட்சிதர்கள் சிறப்பு அர்ச்சனை, ஆராதனை செய்து அமைச்சருக்கு பிரசாதம் வழங்கினர். அடுத்து அமைச்சர் சேகர்பாபு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனர். சாமி தரிசனம் முடித்து திரும்பிய அமைச்சர் சேகர்பாபு ஆயிரங்கால் மண்டபம் முன்பு உள்ள நடனப் பந்தலில் தரையில் அமர்ந்து கோயில் பொதுதீட்சிதர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது தீட்சிதர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அரசு தரப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் தீட்சிதர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து கோபுர வாயிலில் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டியின்போது, கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தேன். தீட்சிதர்கள் மகிழ்ச்சியோடு அனைத்து சன்னதிகளுக்கு அழைத்துச் சென்றனர் பெருமாள் சன்னதி உள்பட அனைத்து சந்நிதிகளிலும் திவ்ய தரிசனத்தை கண்டேன். மேலும் மன மகிழ்ச்சியோடு கோயில் வளாகத்தில் அமர்ந்து தீட்சிதர்களின் நிலைப்பாட்டையும், அரசு நிலைப்பாடு குறித்தும் பகிர்ந்து கொண்டோம். அடுத்தடுத்த வருகின்ற நிகழ்வுகள் தீட்சிதர்கள், இறையன்பர்கள், அதே நேரத்தில் அரசுக்குட்பட்ட சட்ட திட்டங்கள், இந்து சமய அறநிலையத்துறைசட்ட திட்டங்கள் யாருக்கும் சில மனக்கஷ்டங்கள் இல்லாமல் செயல்படுத்தப்படும். அனைவரும் இன்புற்று வாழ்வதுதான் தமிழக அரசின் நிலைபாடு. நல்லதொரு சுமூகமான முடிவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமூகமான நிலையில் பிரச்சனைகளை நடராஜர் தீர்த்துவைப்பார். வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கு நான் தான் முதல்வர். அவர்களது கோரிக்கைகள் செய்கின்ற இடத்தில் நான் உள்ளேன், என எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கட்டளை பிறப்பித்துள்ளார். அனைவருக்கும் மன திருப்தி அளிக்கு வகையில் முடிவுகள் இருக்கும். தில்லைகோவிந்தராஜப்பெருமாள் திருப்பணி குறித்து தீட்சிதர்களிடம் ஆலோசித்து கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான அனைத்து உதவிகளையும், சமரசப் பேச்சுகளிலும் தமிழக முதல்வர் உத்தரவு பெற்று இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டு செயல்படுத்தும். இந்த ஆட்சி துலாக்கோல் போன்றது. அனைவருக்கும் சமமான நீதி வழங்கும் ஆட்சி இது. பாரம்பரியம் மாறாமல் அதே நேரத்தில் இறையன்பர்களுக்கு உண்டான சாமி தரிசனம் செய்ய எந்தவித குந்தகம் ஏற்படாமல் இருக்கவும், இறைவனுக்கும், பக்தர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் ஒரு பாலமாக இருந்து அனைத்து பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படுத்தப்படும். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 180 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணி நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் தான் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 12 ஆயிரத்து 959 திருக்கோயில்களுக்கு ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் வைப்பு நிதி இருந்ததை, 2 லட்சமாக உயர்த்தி, அந்த வட்டியின் மூலம் ஒரு கால திட்டத்தில் தீபங்கள் ஏற்ற, முதல் கட்டமாக 129.59 கோடி ஒதுக்கி முதல்வர் செயல்படுத்தியுள்ளார். இந்த ஆண்டு மானிய கோரிக்கையில் மேலும் 2 ஆயிரம் கோயில்கள் ஒரு கால பூஜை திட்டத்திற்கு 40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு நலத்தை கருத்தில் கொண்டு மாதம், ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 109 அர்ச்சகர்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதா, மாதம் வங்கியில் செலுத்தப்படுகிறது. கிராமப்புற திருக்கோயில்களுக்கு ஒரு ஆண்டுக்கு ஆயிரம் திருக்கோயில்கள் என 1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை, முதல்வர் ஸ்டாலின் 2 லட்சமாக உயர்த்தி ஒதுக்கீடு செய்தார். இந்த ஆண்டு மட்டும் சுமார் ஆயிரத்து 500 திருக்கோயில்கள் ஆயிரம் கோடி செலவில் திருப்பணி மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இந்த ஆட்சியை பொறுத்தவரை ஆத்திகர்கள், நாத்திகர்கள் ஒரு சேர்ந்த ஆட்சி. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. நடராஜர் கோயில் தீட்சிதர்கள் எங்கள் மீது அன்பு வைத்திருக்கிறார்கள். இந்த ஆட்சி வருவதற்கு அவர்களும் பல்வேறு வகையில் உதவியாக இருந்துள்ளார்கள். அனைவரையும் சமமாக கருதும் முதல்வர் ஸ்டாலின் அரசு யாருக்கும் நீதியை மறுப்பதற்குண்டான இந்து சமய அறநிலையத்துறையாக இருக்காது. தமிழகஅரசும் இருக்காது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !