நத்தக்கரை நல்லசேவன் கோவிலில் வினோத திருவிழா : நள்ளிரவில் வழிபாடு
ADDED :1263 days ago
தலைவாசல்: திருமணமான சுமங்கலி பெண்கள், ‘விதவை’ கோலத்தில், நத்தக்கரை நல்லசேவன் கோவிலில், நள்ளிரவில் பொங்கல் வைத்து வினோத திருவிழாவை கொண்டாடினர்.
இதற்காக, நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:30 மணிக்கு, நத்தக்கரையில் இருந்து பலர், மேள தாளத்துடன், ஊர்வலமாக சென்றனர். நள்ளிரவு, 12:30 மணிக்கு, திருமணமான பெண்கள், பூஜை பொருட்கள் அடங்கிய பொங்கல் கூடையுடன் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து, ‘விதவை’ கோலமான வெள்ளை நிற ஆடை அணிந்து, நகை அணியாமல், கோவில் முன் பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று காலை, 6:00 மணிக்கு வசிஷ்ட நதியில் இருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, ராணுவ வீரர் சீருடையில் வந்த பூசாரி நல்லசேவி, சுவாமி உத்தரவு கொடுத்ததும், 50க்கும் மேற்பட்ட கிடா, சேவல்களை, பலி பூஜை கொடுத்தார். தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தை பாக்கியம் வேண்டி ஈரப்புடவையுடன் மடிப்பிச்சை ஏந்தி, ‘கிடா’ ரத்தம் கலந்த உணவை சாப்பிட்டனர். இன்று, தேர் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது: ஐதீக முறைப்படி நடந்த வினோத பொங்கல் விழா, சூரிய உதயத்துக்கு முன் நடத்தப்பட்டது. இதில் திருமணமான புகுந்த வீட்டு பெண்கள் மட்டும் பங்கேற்பர். பொங்கல் விழா முடிந்ததால், 3 நாளுக்கு பின், நிறைமாத சினை ஆட்டை, சுவாமிக்கு, ‘சூளைஆடு’ என பலியிடுவர். அதன் வயிற்றில் உயிருடன் உள்ள குட்டிகளை, சுவாமியை வழிபட்டு மண்ணில் புதைத்து விடுவர். தொடர்ந்து அந்த ஆட்டு கறி சமைக்கப்பட்டு, ஆண்கள் மட்டும் சாப்பிடுவர். மீதியாகும் கறியை, அப்படியே மண்ணில் புதைத்துவிடுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.