உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஷ்மீரில் கீர் பவானி கோவில் விழா: பண்டிட்டுகளுக்கு பலத்த பாதுகாப்பு

காஷ்மீரில் கீர் பவானி கோவில் விழா: பண்டிட்டுகளுக்கு பலத்த பாதுகாப்பு

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் கீர் பவானி கோவில் திருவிழாவில் பங்கேற்க, காஷ்மீர் பண்டிட்டுகள் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

காஷ்மீரில் கந்தர்பால் மாவட்டம் துல்முலாவில் உள்ள ரகன்யா பகவதி கோவில் உட்பட ஐந்து கோவில்களில், ஆண்டுதோறும் ஜூன் 8ல் மாதா கீர் பவானி திருவிழா நடப்பது வழக்கம். இதில் ஏராளமான காஷ்மீர் பண்டிட்டுகள் பங்கேற்று பகவதி அம்மனை வழிபடுவர். கடந்த இரண்டு ஆண்டு களாக கொரோனா பரவல் காரணமாக கீர் பவானி கோவில் திருவிழா நடக்கவில்லை.

இந்நிலையில், காஷ்மீர் நிர்வாகம், இந்தாண்டு கீர் பவானி திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளித்துஉள்ளது. இதற்காக பதிவு செய்த, 250 பண்டிட்டுகள் நேற்று ஜம்முவில் இருந்து பஸ்கள் வாயிலாக துல்முலாவிலிருக்கும் கீர் பவானி கோவிலுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை, ஜம்மு மண்டல போலீஸ் கமிஷனர் ரமேஷ் குமார் கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார். இதையடுத்து ரமேஷ் குமார் கூறியதாவது: 250 காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் ஜம்முவைச் சேர்ந்தவர்கள் கீர் பவானி கோவில் திருவிழாவிற்கு பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் இன்று பகவதி அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபடுவர். நாளை அவர்கள் ஜம்முவிற்கு அழைத்து வரப்படுவர்.

இந்த யாத்திரைக்கு பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிரமமின்றி திருவிழாவில் பங்கேற்று திரும்ப தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது. செல்லும் வழி முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். காஷ்மீரில் கடந்த மாதம், மூன்று போலீசார் மற்றும் ஐந்து பண்டிட்டுகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதனால் காஷ்மீர் பண்டிட்டுகள் அச்சத்தில், ஜம்முவுக்கு இடம் பெயரத் துவங்கியுள்ளனர். இதன் காரணமாக, இந்தாண்டு கீர் பவானி திருவிழாவில் மிகக் குறைந்த அளவிற்கே பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !