உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரண்டாண்டிற்குப் பின் செல்லியம்மன் கோயிலில் தேரோட்டம்

இரண்டாண்டிற்குப் பின் செல்லியம்மன் கோயிலில் தேரோட்டம்

புவனகிரி: புவனகிரி தாலுக்கா, மருதூர் அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் இரண்டாண்டிற்குப் பின் சுற்றுப்பகுதி பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கடலுார் மாவட்டம், புவனகிரி தாலுக்கா, வள்ளலார் அவதரித்த மருதூரில் வரலாற்று சிறப்பு வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை நாயுடு சமுகத்தை சேர்ந்தவர்கள் காலம் காலமாக நிர்வகித்து வருகின்றனர். தற்போது எட்டாது தலைமுறையாக நிர்வாக பொறுப்பில் உள்ளனர். அந்த வகையில் தற்போது கிணற்றில் எட்டு அம்மன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.ஒரு தலைமை முறை நிர்வாக பொறுப்பேற்றவுடன் ஒரு சிலை செய்து வைப்பது வழக்கம். இக்கோவிலில் உதிரவேங்கை மரத்தில் செய்யப்பட்ட அம்மன் ஆண்டுதோறும் கிணற்றில் தண்ணீரில் மூழ்கி வைக்கின்றனர். வைகாசி மாதம் கடைசி அமாவாசைக்குப் பின் புதன் கிழமை மாலையில் சுமார் 50 அடி ஆழம் நிறைந்த கிணற்றில் இருந்து அம்பாளை வெளியில் எடுத்து, வியாழக்கிழயைில் தேரோட்டம் நடத்துகின்றனர்.


குறிப்பாக கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் தேரை இழுத்துச்சென்று அன்று இரவே கிணற்றில் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். கிணற்றில் இறங்கி சிலையை எடுத்தால் அம்மன் முகம் எந்த கோணத்தில் உள்ளதோ அந்த நிலை ஆண்டு முழுவதும் நீடிக்கும் என்பதால் அப்பகுதியினர் பய பக்தியுடன் விரதமிருந்து சுவாமியை வெளியில் எடுப்பதுடன் கோவில் திருவிழாவிற்கு காப்புக்கூட இரவில் கட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டு தேரோட்டம் தடைபட்ட நிலையில் இந்த ஆண்டிற்கான விழாவை முன்னிட்டு கடந்த 7ஆம் தேதி இரவு காப்பு கட்டி கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. 8 மற்றும் 9 தேதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்து வந்தது.  ஆண்டு முழுவதும் நீர் நிறைந்த கிணற்றில் அம்மன் பாதுகாக்கப்பட்ட, புதன்கிழமை இரவு சுவாமியை வெளியில் எடுத்து எல்லையில் சிறப்பு படையல் செய்து சுவாமியும், தேர் கலசமும் தனித்தனியாக வீதியுலாவாக வலம் வந்தனர். அதன் பின் அலங்கரிக்கப்பட்ட தேரின் உச்சியில் கலசம் அமைத்து அம்மனை தேரில் அலங்கரித்து பகல் 12.00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. 100 மீட்டர் தேர் சென்றதும் தேரை அதே இடத்தில் நிறுத்தி வைத்து மாலை 3.00 மணிக்கு மீண்டும் துவங்கி வீதியுலாவாக வந்தனர். இரவு தேர் நிலையை அடைந்ததும், அம்பாளை இறக்கி மீண்டும் கிணற்றில் வைத்தனர். இந்த ஆண்டு அம்மன் சிரித்த முகத்துடன் இருந்ததால் நாட்டில் அமைதி நிலவி, விவசாயம் செழித்து மக்கள் நலமுடன் இருப்பார்கள் எந்த பாதிப்பும் இருக்காது என்ற நம்பிக்கையில் அப்பகுதியினர் மகிழ்ச்சியில் உள்ளனர். கோவில் நிர்வாகத்தை சேர்ந்த ஒன்பது நிர்வாகிகளும் இதே கருத்தை முன் மொழிகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அம்மன் கோர முகத்துடன் இருந்ததால் கொரோனா தொற்று ஏற்பட்டு அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், தேரோட்டம் தடைபட்டதாகவும் கூறுகின்றனர். நிகழ்ச்சியில் சுற்றுபகுதியினர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கினர். அம்மனை புகைப்படம் எடுத்தால் முகம் தெளிவிருக்காது என்ற அப்பகுதியினர் தடுத்தும், பலர் ஆர்வத்துடன் படம் எடுத்த நிலையில் அம்மன் படம் கலங்கிய நிலையில் இருந்தது வியக்க வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !