பெரம்பலூரில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம்
பெரம்பலூர்: பெரம்பலூரில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு 19வது ஆண்டு காவிரி தீர்த்த ஊர்வலம் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வாலிபர்கள் காவிரி தீர்த்தத்தை குடங்களில் எடுத்துவந்து கம்பத்து ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர்.பெரம்பலூரில் உள்ள பஞ்சப்பாண்டவர் வழிபட்ட பெருமை பெற்ற மரகத வல்லித்தாயார் சமேத தனகோபாலசுவாமி
கோவிலில் ஆடி பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.இதையொட்டி பெரம்பலூரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாலிபர்கள் திருச்சிக்குச் சென்று அங்கிருந்து காவிரி ஆற்றில் ஆழ்துளை கிணறுமூலம் எடுக்கப்பட்ட தீர்த்தத்தை குடங்களில் சுமந்து பாதயாத்திரையாக சிறுவாச்சூர் வழியாக பெரம்பலூர் வந்தடைந்தனர்.விழாவை முன்னிட்டு வெள்ளந்தாங்கி அம்மன் கோவிலிருந்து புறப்பட்ட காவிரி தீர்த்த ஊர்வலம் அதிர்வேட்டுகள், மேளதாளம் முழங்க தெற்குத்தெரு, கடைவீதி. தேரடி வழியாக மதனகோபாலசுவாமி கோவிலுக்கு காவிரி தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.ஊர்வலத்தில் வாலிபர்கள் கோவிந்தா, கோபாலா என்ற கோசத்துடன் வந்து, மதனகோபாலசுவாமி மற்றும் கம்பத்து ஆஞ்சநேயருக்கு காவிரி தீர்த்த அபிஷேகம் செய்தனர்.